Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் » கல்லாடம்
கல்லாடம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2013
11:56

அளவில்லாத ஞான நூல்கள், அடிச்சுவடுகூட இல்லாமல் போய்விட்டன. அதுவும் தமிழில், அவ்வாறு ஏராளமான நூல்கள் மறைந்து போயிருக்கின்றன. அந்த நூல்கள்  இருந்ததற்கு அடையாளமாக உரைநூல்களில், பல பழந்தமிழ் நூல்களின் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டு இருக்கின்றன. அப்படிச் செய்ததால், சில பாடல்களாவது பிழைத்தன. எந்தவிதமான வசதியும் இல்லாத காலத்தில் உடைந்து போய்விடக்கூடிய ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியால் கை வலிக்க எழுதி... கறையானும் கால வெள்ளமும் அழித்துவிட நேர்ந்தும்... சிலவற்றையாவது நம் தலைமுறை வரை கட்டிக்காத்து நம்மிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார்களே! அதை எண்ணி, அந்த முன்னோர்களை வணங்கவேண்டாமா? எப்படி வணங்குவது? அவர்களின் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா? என்று எண்ணவேண்டாம். புகைப்படம் இல்லாவிட்டால் என்ன? அவர்கள் தந்துவிட்டுப் போன நூல்கள் இருக்கின்றனவே! அவற்றை இயன்றவரை எளிமைப்படுத்தி, அடுத்த தலைமுறையிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதே முன்னோர்க்கு நாம்செலுத்தும் மரியாதையாகும்.  அப்படியான நூல்களில் குறிப்பிடத்தக்கது கல்லாடம்! இந்நூலை எழுதியவர் கல்லாடர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலையும் கல்லாடர் சொல்லச் சொல்ல, மதுரையில் எழுந்தருளி இருக்கும் சொக்கநாதரான சிவபெருமான் தலையை அசைத்து ஒப்புதல் கொடுத்த அற்புதமான நூல் இது.

கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே!, கல்லாடம் படித்தவனுடன் மல்லாடாதே! என்றெல்லாம் சொல்லிப் பாராட்டப்படும் உயர்வும் கல்லாடத்துக்கு உண்டு. மிக உயர்வான அந்தக் கல்லாடம் என்ற நூல், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் புலவர் பெருமக்களால் நன்கு பயிலப்பட்டது, தற்போதோ, நாம் செய்த தவப்பயனால், ஒருசில நூலகங்களில் மட்டுமே இடம் பிடித்திருக்கிறது. அற்புதமான அந்த நூலில் இருந்து அபூர்வமான ஒருசில தகவல்கள் இங்கே... சமஸ்கிருதத்தில் ஸ்காந்தம் என்று வியாசர் எழுதிய ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட நூல், தமிழில் கந்தபுராணம் என்று, கச்சியப்ப சிவாச்சார்யர் எழுதிய 10,345 பாடல்களைக் கொண்ட நூல்... என முருகப்பெருமானைப் பற்றி முழுவதுமாகச் சொல்லும் நூல்கள் இரண்டு உள்ளன. ஆனால் அந்த நூல்களில், சூரபத்மன் கடைசியாகக் கொண்ட மாயவடிவான, தலைகீழாக இருந்த மாமரத்தைப் பற்றி விரிவாகச் சொல்லப்படவில்லை. அதைக் கல்லாடம் விரிவாகவும், தெளிவாகவும் விளக்குகிறது. சூரபத்மன் தலைகீழான மாமரமாக வந்தான்; அந்த மாமரம் பெரிய பெரிய கிளைகளோடு, பூவும் பிஞ்சுமாகக் காற்றில் அலைந்து ஆடிக்கொண்டிருந்தது (சுருக்கம்). இந்தத் தகவலை கல்லாடம் எப்படிக் கூறுகிறது எனப் பார்க்கலாம். நஞ்சை ஒத்து, மாயை என்னும் முளையைத் தோற்றுவித்து, உள்ளத்தில் உள்ள பொறாமை என்னும் கிளைகளை எட்டுத் திசைகளிலும் பரப்பி, இருண்ட மனமாகிய தளிர்களைத் தளிர்த்திருந்தது அந்த (சூர) மாமரம். அதன் அடிப்பகுதி ஆயிரம் காத தூரம் அகன்று இருந்தது. அதனுடைய அழகிய உடலோ இருபதினாயிரம் காத தூரம் நீண்டு, சுற்றிலும் 5,000 காத தூரம் அகன்று பரவி, மிகுந்த வஞ்சனையாகிய பூங்கொத்துகளைத் தந்தது. அந்தப் பூங்கொத்துகள், கொடிய கொலை என்னும் பிஞ்சுகளாயின. அந்த (சூர) மாமரத்தின் கிளை முதலியவை கீழே பொருந்தியதாகி,  மிகுந்த பழியாகிய வேர் மேலே அலைந்து கொண்டிருந்தது. வீரம் நிறைந்த இந்த மாசூரனைக் கொன்ற, நீண்ட வேலாயுதத்தை உடைய முருகக் கடவுள் மலைக்குற மகளான வள்ளியம்மை என்னும் கொடியோடு கட்டுப்பட்டு, பன்னிரண்டு கண்களாலும் நோக்கி, என் இரு வினைகளையும்போக்கும் அருளுக்கு இடமாகிய திருப்பரங்குன்றம்... என்கிறார் கல்லாடர்.

கடுவினை அங்குரங்காட்டி உள்ளழுக்காறு
எண்டிசைச் சாகை கொண்டு, இருள் மனம் பொதுளி
கொடுங்கொலை வடுத்து, கடும் பழிச்சடையலைந்து
இரண்டைஞ்நூறு திரண்ட வக்காதம்
சுற்றுடல் பெற்று துணைப் பதினாயிரம்
மற்றதின் நீண்டு மணியுடல் போகி
ஐம்பது நூறுடனகன்று சுற்றொழுக்கி
பெருங்க விழிணர் தந்தவை கீழ்க் குலவிய
அடல் மாக் கொன்ற நெடுவேற் குளவன்;
குன்றவர் வள்ளியங் கொடியோடு துவக்கிப்
பன்னிரு கண் விரித்தென் வினை துரக்கும்
அருள் பரங்குன்றம்

இயற்கை நியதி, மரத்தின் வேர் கீழ் நோக்கியும் கிளைகள் மேல்நோக்கியும் இருக்கவேண்டும். ஆனால், இங்கே இந்த (சூர) மாமரமோ தலைகீழாக இருக்கிறது. ஒரு மனிதன் ஆணவம் பிடித்து அலைந்தால், என்ன...ஆளே தலைகீழா நடக்கிறானே! என்போம். ஆணவமும் அகங்காரமும் மிகுந்திருந்த சூரபதுமனாகிய மாமரத்தையும் அப்படியே வர்ணிக்கிறார் கல்லாடர். ஆணவத்தால் அழுக்காறு வரும்; அழுக்காற்றினால் எட்டுத் திசைகளிலும் எங்கு பார்த்தாலும் வெளிச்சத்தின் (விடிவின்) அடிச்சுவடே தெரியாமல் இருட்டே தோன்றும். அதன் காரணமாக அளவில்லாத வஞ்சகம் வரும். கொலை, களவு நிகழ்ந்து வாழ்க்கையே விஷம் ஆகிவிடும். இவற்றில் இருந்து நம்மை காக்கக் கூடியவன் முருகன் ஒருவனே! அந்த முருகன் இதோ, இந்தத் திருப்பரங்குன்ற மலைமீது, நம் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் இச்சை என்னும் சக்தியான வள்ளியம்மையுடன் நமக்கு அருள் செய்யவே வீற்றிருக்கிறான். அவன் அருள் நமக்கெல்லாம் கிடைக்குமா என்று சந்தேகப்பட வேண்டாம். ஏன் தெரியுமா? முருகன் தன் பன்னிரண்டு விழிகளாலும் என்னைப் பார்த்தான். என் பாவ- புண்ணியம் எனும் இரு வினைகளும் நீங்கின. நான் பேரின்பத் தேனை அள்ளி உண்டு கொண்டிருக்கிறேன். நீங்களும் வாருங்கள் என்று கல்லாடர் நம்மை ஆற்றுப்படுத்துவதைப் போல அமைந்த அற்புதமான பாடல் இது.

ஆணவ அழுக்கடையும்
ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொரு
பார்வைக்காரனும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.