பதிவு செய்த நாள்
04
செப்
2013
10:09
ராஜமுந்திரி: ஆந்திர மாநில சிவன் கோவில் ஒன்றில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த, அரிய வகை நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேற்கு கோதாவரி மாவட்டத்தில், 300 ஆண்டுகளுக்கு முன், சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட, பழமையான சிவன் கோவில் உள்ளது. சிதிலமடைந்திருந்த இந்தக் கோவிலை, ரெட்டி மன்னர்கள் புதுப்பித்துள்ளனர். தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில், இந்தக் கோவில் உள்ளது. கடந்த நவம்பரில், இக்கோவிலில், 150 அடி உயர தூண் இடிந்து விழுந்ததையடுத்து, அதை சீரமைக்கும் வகையில், அகழ்வுப்பணிகள் நடைபெற்றன. அப்போது, பழங்கால நாணயங்கள், 975 கண்டெடுக்கப்பட்டன. இதில், தங்க நாணயங்கள், ஐந்து, வெள்ளி நாணயங்கள், 40, தாமிர நாணயங்கள், 930 இருந்தன. இவற்றின் காலம், 1853 - 1873 வரை இருக்கலாம் என, தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவிலின் செயல் அலுவலர், சூரியசந்திர ராவ் கூறுகையில், ""கோவில் தூண் இடிந்து விழுந்ததை அபசகுனமாக மக்கள் கருதுகின்றனர். நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே அவற்றை வைத்து விடும்படி பொதுமக்கள் கூறினர். அதன் படி, அந்த நாணயங்கள், கோவில் தூணின் அடியில் புதைக்கப்பட்டன, என்றார்.