பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், ஸ்ரீவாரி மெட்டு பகுதி வழியே, மாலை, 5:00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்க, ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி பகுதியில் இருந்து, பக்தர்கள் பாத யாத்திரையாக வருவர். இதில், ஸ்ரீவாரி மெட்டு பகுதி, அடந்த வனப்பகுதியில் இருப்பதால், மாலை மற்றும் இரவில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தற்போது, இப்பாதையில், மாலை, 6:00 மணி வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் இரவு, 7:30 மணிக்கு, திருமலையை சென்றடைகின்றனர். எனவே, இப்பகுதியில், மாலை, 5:00 மணி வரை அனுமதிக்கப்பட்டால், 6:30 மணிக்குள், திருமலையை அடைய வசதியாக இருக்கும். எனவே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அலிபிரி பகுதி வழியாக, 24 மணி நேரமும், பக்தர்கள் பாத யாத்திரையாக செல்லலாம்.
தங்க கவசம்: சேதமடைந்துள்ள ஏழுமலையான் ஸ்ரீவாரி பாதங்களுக்கு, தங்கக் கவசம் அணிவிக்க வேண்டும். சேதமடைந்த பாதங்களுக்கு பதிலாக, புதிய பாதங்களை ஏற்பாடு செய்வது சரியல்ல; உடைந்த பாதத்தை, சிற்பிகளைக் கொண்டு சரி செய்து, அஷ்டபந்தனம் செய்து, பாதுகாப்புக்காக, தங்கக் கவசம் அணிவித்து, பூஜைகள் செய்தால், இம்மாதிரியான பிரச்னைகள் ஏற்படாது. என்று, புஷ்பகிரி மடாதிபதி ஸ்ரீவித்யாநரசிம்மபாரதி சுவாமி, தேவஸ்தானத்திடம் கூறியுள்ளார்.
பிரம்மோற்சவ ஏற்பாடு: அக்., 5 ல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.