ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ,பாதுகாப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். ஆண்டாள் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயில்களில் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில்கள் மூலம் தீவிர சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஜூலையில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த சஜித்குமார் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் எஸ்.ஐ. ஆகியோர் கோயிலை ஆய்வு செய்து பாதுகாப்பிற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் சுவரை யொட்டி ,மாடவீதிகளில் நின்ற மரங்கள் அகற்றப்பட்டன. பாதுகாப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி செயல் அலுவலர் சுப்பிரமணியனிடம் கேட்டறிந்தனர். பின் ராஜகோபுரம் ஆண்டாள் கோயில் விமானம் ஆடிப்பூர மண்டபம் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு நடத்தினார். கண்காணிப்பு கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று இரவு மூன்று இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக நேற்று இரவு கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி துவங்கியது.