உளுந்தூர்பேட்டை: பாதூர் பூரணி பொற்கலை சமேத அய்யனார் கோவிலில் ஊரணி திருவிழா நடந்தது. ஊரணி பொங்கல் திருவிழா கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதற்காக சுவாமி கடந்த 20ம் தேதி கோவிலை விட்டு புறப்பட்டு ஏரியிலுள்ள அய்யனார் மண்டபத்தில் தங்கி தினசரி வீதியுலா வந்தது. இறுதி நாளான நேற்று முன் தினம் மாலை 3 மணிக்கு ஊர் மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். பரியூர் அய்யனாரப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் 5 மணிக்கு பரியூர் அய்யனராப்பன் சுவாமி அய்யனார் மண்டபத்தில் இருந்து குதிரையில் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா வந்து மண்டபத்தை அடைந்தது. பாரிவேட்டையடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தை சுற்றி வந்த சுவாமி நேராக கோவிலுக்கு சென்றது. பாதூர், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.