தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று ஆவணித் திருவிழா தேரோட்டம் நடந்தது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித்திரு விழா ஆக.27 ல் துவங்கியது. தினமும் முருகன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று, தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு சுவாமிக்கு விஸ்ரூப தீபாராதணை நடந்தது. விநாயகர் தேர் 6.10 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் 6.40 மணிக்கு நிலையை அடைந்தது. குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வாணையுடன் வீற்றிருந்த தேர் 7.50 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, கோஷத்துடன் தேர் ரத வீதிகள் வழியாக வலம் வந்து 8.15 மணிக்கு நிலையை அடைந்தது. அம்பாள் வள்ளியம்மன் வீற்றிருந்த தேர் 8.20 மணிக்கு வடம் பிடித்தனர். தேர் 9 மணிக்கு நிலையை அடைந்தது. விழா நாளை மறுநாள் செப்.,7 ல் மஞ்சள் நீராட்டத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் மணிகண்டன், இணை கமிஷனர் அன்புமணி ஆகியோர் செய்திருந்தனர்.