பதிவு செய்த நாள்
06
செப்
2013
11:09
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவிவையொட்டி நடக்கும் தேரோட்டத்துக்கு முன் திருவண்ணாமலையில், சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர், 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கிறது. நவம்பர், 17ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சி மீது மஹா தீபமும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகள் துவங்க வரும், 8ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. தொடர்ந்து தீபத் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் நடக்கிறது. தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஞானசேகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., முத்தரசி, டி.ஆர்.ஓ. வளர்மதி, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை நகரை இணைக்கும் முக்கிய சாலைகள் சீரமைப்பு, தேரோடும் மாடவீதி சீரமைப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம், சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார வசதி, நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகள், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைவாரியாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது, முருகர் தேர் விரிசல் ஏற்பட்டது, அதற்கு சாலையில் இருந்த மேடு, பள்ளங்களும் முக்கிய காரணம் என விவாதிக்கப்பட்டது, தீபத்திருவிழாவுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவசர, அவசரமாக சாலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். முன்கூட்டியே சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.