பெண்ணாடம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மதனகோபால், கருணாநிதி, பெண்ணாடம், வெண்கரும்பூர், அரியராவி உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், விநாயகர் சிலைகள் ஐந்து அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை வைக்கக் கூடாது. சிலைகளுக்கு ரசாயன வர்ணம் பூசக்கூடாது. தண்ணீரில் எளிதில் கரையும் நச்சுதன்மையற்ற வர்ணம் மட்டுமே பூச வேண்டும். அனுமதித்த இடத்தில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை வைக்க போலீசாரின் அனுமதி பெற வேண்டும். சிலைகள் வைக்கும் இடத்தின் உரிமையாளரிடம் எழுத்து மூலம் ஒப்புதல் கடிதம் பெற்று, அதனை சிலை வைக்க மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி கோரும் மனுவோடு இணைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை டி.எஸ்.பி., வழங்கினார்.