துறையூர்: துறையூர் அருகே பெருமாள்பாளையத்தில் சிவகாம சுந்தரி சமேத செவ்வந்தி நாதேஸ்வரர், பரிவார தெய்வங்கள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பூலானேரி வரதராஜப்பெருமாள் கோவில் நாளை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்பாளையத்தில் எழுந்தருளியுள்ள சிவகாம சுந்தரி சமேத செவ்வந்தி நாதேஸ்வரர், பரிவார தெய்வங்கள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பூலானேரி வரதராஜப்பெருமாள் திருக்கோவில்கள் கும்பாபிஷேகம் நாளை காலை ஏழு மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. செவ்வந்தி நாதர்கோவிலில் கடந்த ஐந்தாம் தேதி காவிரியிலிருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வந்து கணபதி ஹோமம் நடந்தது. மாலை வாஸ்து சாந்தி செய்தனர். நேற்று மாலை யாக சாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை யாக பூஜை இரண்டாம் காலம், மூன்றாம் காலம் நடக்கிறது. பெருமாள் கோவிலில் நேற்று காலை சுதர்சன ஹோமம், பூர்ணா ஹுதி செய்து மாலை யாக சாலை பூஜை துவங்கியது. இன்று காயத்ரி ஹோமம், மகா அபிஷேகம், சங்கல்பம் நடைபெறும். மாலை ஆறு மணிக்கு தஞ்சை அருணாசுப்ரமணியம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நாளை செவ்வந்தி நாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை எட்டு மணிக்கும் பெருமாள் கோவிலில் காலை 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். 10 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு ஸ்வாமி திருக்கல்யாணம், மாலை ஆறு மணிக்கு புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இரவு ஒன்பது மணிக்கு ஸ்வாமி வீதி உலா நடைபெறும்.விழா ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் கயிலை மாமணி ராமநாதன், செயலாளர் வக்கீல் புஷ்பராஜ் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.