பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
*தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் விரும்புகிறபடியே மாற தியானம் ஒன்றே கைகொடுக்கும்.
*மனதில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் எண்ணமெல்லாம் தியானம் ஆகாது.
*புதர் கூட்டத்திலே தீப்பிடித்தது போல, மனதிலுள்ள கவலைகளை எரிக்கும் ஜோதியாக விளங்குவதே தியானம்.
*உள்ளத்தில் தீரம், அமைதி, பலம், தேஜஸ் (ஒளி), சக்தி, அருள், பக்தி ஆகிய உயர்ந்த எண்ணங்களை நிரப்புங்கள். எதிர்மறையான சிந்தனைகள் என் அறிவினுள்ளே நுழைய இடம் கொடுக்க மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
*தொடக்கத்தில் சிறுமையான எண்ணங்கள் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப்படுத்தும். வெளியே பிடித்து தள்ளினாலும் போக மாட்டேன் என்று பிடிவாதம் செய்யும். நல்ல எண்ணத்தை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டால், தொல்லைப்படுத்தி வந்த தீய எண்ணங்கள் தானாகவே ஓடிவிடும்.
*பசிக்கு உண்ணும் உணவைப் போல, அன்றாடம் தியானம் செய்வது அவசியம். சோற்றை விட்டாலும், ஒரு தனியிடத்தில் அமர்ந்து தியானம் செய்ய மறவாதீர்கள்.
*வாயினால் பழங்கதை சொல்வது போல, முணுமுணுப்பது வழிபாடு ஆகாது. உயிரின் உள்ளிருந்து பிரார்த்தனை வர வேண்டும்.
*எப்போதும் உனது சொந்தக் கருத்துடன், சொந்த வசனங்களில் பிரார்த்தனை இருப்பது தான் தியானம்.
*கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில்விழுவது போல, மனித இனம் நன்மையை நன்றாக உணர்ந்தும், தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது. இந்த நிலைமையில் இருந்து மீண்டு வர வேண்டும்.
*அன்பே இன்பம் தரும். பகைமையால் உலகம் அழியும். இந்த உண்மையை உணர்ந்துள்ள நாம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவோம்.
*வாழ்வில் குறுக்கிடும் நஷ்டம், துன்பம் இவற்றை பொருட்படுத்தாமல் தைரியத்தை இழக்காமல் உண்மையின் வழியில் செல்பவனே, வெற்றி சிகரத்தை தொடுவான்.
*மனதிற்குள் நுழையும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இயற்கையிலேயே நமக்கு இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பத்தில் தடுக்கி விழுந்தாலும், பயிற்சியின் பேரில் எழத்தான் செய்வோம்.
*நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மை பிறர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், நம்பிக்கையை கைவிடாமல் இருந்தால் நாளடைவில் வெளியுதவிகள் தாமே வரும்.
*ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை. எத்தனை இடையூறுகள் வந்தாலும், செயலில் உறுதியாக இருந்து வெற்றி காண்பவனே மனிதர்களில் சிறந்தவன்.
*மனிதனுக்குப் பகைவர்கள் வெளியில் இல்லை. பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்களே பகைவர்கள். இவற்றை ஒரே பெயரில் நம்பிக்கைக்குறைவு என்று சொல்கிறார்கள். இந்தஅசுரனை ஒழித்து விட்டால், நமக்கு நல்லகாலம் விரைவில் வந்து விடும்.
-பாரதியார்