Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சச்சிதானந்த சுவாமிகள்
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 செப்
2013
04:09

பழவினைகள் தீர்த்தவனாம் பழநியுறை திருமுருகன்
கழல் பணிந்து புகழ்பாடும் கடமையுடன் பிறவியறும்
வழிகாட்டும் குருவருளால் வள்ளிமலைப் பணிபுரிந்த
அழகர் சச்சிதானந்தர் அகம் அமர்வேள் பதம்போற்றி

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், ஜனவரி முதல் தேதியன்று ஆங்கிலேய அதிகாரிகளைப் பார்த்து வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் நம் மக்களிடையே இருந்துவந்தது. அரசாங்கத்தில் பணிபுரிவோர் தங்கள் உத்தியோக உயர்வு மற்றும் மேல் அதிகாரிகளிடம் நட்பையும் நல்லெண்ணத்தையும் வளர்க்கும் நிமித்தமாக பூமாலைகள், இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றுடன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

இப்படி வருடத்தின் முதல் தேதியன்று அடிமை போன்று ஆங்கில  துரையின் காலில் ஏன் விழ வேண்டும்? அதே தினத்தில், திருத்தணிகையில் அருள் வழங்கும் நம் தணிகை துரையைத் தரிசித்து, வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புறலாமே! என்ற சிந்தனையில், 1917- ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி, முருகன் அடியார்கள் ஆறு பேரை அழைத்துக்கொண்டு தணிகை துரையை தரிசிக்கக் கிளம்பினார் ஒருவர். இப்படி, 1918 ஜனவரி முதல் தேதியன்று ஆரம்பித்த  திருத்தணி திருப்படி விழா என்னும் இயக்கம், இன்று ஒவ்வொரு டிசம்பர் 31, ஜனவரி முதல் தேதியன்று தணிகை வேலனைக்கண்டு தொழ 6 லட்சம் பேரைக் கூடவைக்கிறது. திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமானே என்று பாடிய அருணகிரிநாதரின் வாக்கை மெய்ப்பிக்கிறது இது. திருத்தணி மட்டுமா... மலைத் தலங்கள் அனைத்திலும் திருப்புகழ் பாடி திருப்படி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இப்போது இப்படித் திருப்புகழ் பாடிக் கொண்டுமலைப்படி யேறி திருப்புகழ்த் திருவிழாவை ஆரம்பித்து வைத்த பெருமைக்கு உரியவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். இவரது வரலாற்றை அறிவோமா? கொங்கு நாட்டில் பவானி என்னும் திருத்தலம் அருகில், பூநாச்சி என்ற கிராமத்தில் சிதம்பர ஜோசியர்- லக்ஷ்மியம்மாள் தம்பதி வாழ்ந்து வந்தனர். பல ஆண்டுகளாக இவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லை. ஒருநாள், அவர்கள் இல்லத்தில் புகுந்த ஒரு பாம்பு, அந்த அம்மையார் அருகில் வந்து மண்டலமிட்டு ஆடியது. அம்மையார் உடனே கற்பூரம் ஏற்றிக் காண்பிக்கவும், அந்த நாகம் ஓடி மறைந்தது.

அந்த ஊருக்கு அருகிலுள்ள நாககிரி எனும் திருச்செங்கோட்டு மலைக்குத் தம்மை வருமாறு அழைக்கத்தான் அந்த நாகம் வந்ததோ என்று எண்ணிய தம்பதி, விரத நியமங்களுடன் பன்னிரண்டு அமாவாசை தினங்களில் திருச்செங்கோட்டுக்குச் சென்று, ஆண்டவனைத் தரிசித்து வந்தார்கள். அதன் பயனாக 25.11.1870 அன்று, கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தில் ஒருஅழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அர்த்தநாரி என்று பெயரிட்டு வளர்த்தனர். இளமையில் பெற்றோரை இழந்த அர்த்தநாரிக்குப்படிப்பில் ஆர்வம் இல்லாமல் போனது. குஸ்தி, சிலம்பு  வித்தை முதலியவற்றைக்  கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். ஒன்பதாம் வயதில் திருமணம் ஆயிற்று, மைசூர் அரண்மனையில் தலைமைச் சமயற்காரராக வேலை பார்த்து வந்த அத்தை மகனிடம் உதவியாளராக வேலைக்கு அமர்ந்தார். சமையற்கலையில் கைதேர்ந்தவராகி, மைசூர் அரசரின் யாத்திரை நேரங்களில் முக்கியச் சமையல்காரராக நியமிக்கப்பட்டார்.  அர்த்தநாரி தமது 22-வது வயதில், ஒரு திருமண விழாவில் பங்கேற்கச் சென்றார். அங்கே, மணமகனுக்கு திடீரென்ற வலிப்பு நோய் ஏற்பட, திருமணம் நின்று போனது. அர்த்தநாரியையே மாப்பிளையாக அமர வைத்து, அவருக்கு அந்தப் பெண்ணை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பின் சில ஆண்டுகளில் முதல் மனைவியும் அவளுடைய மூன்று குழந்தைகளும் இறந்து போயினர். பின்னர், 1907-ஆம் ஆண்டு இரண்டாவது  மனைவியின் இரு பெண் குழந்தைகளும் இறந்துவிட்டன. இது அர்த்தநாரிக்கு வாழ்க்கை மீது தீராத வெறுப்பையும், துக்கத்தையும் அளித்தது. மேலும், அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு, அதற்கு மருந்து உண்டும் பலனற்றுப் போனது.  இந்நிலையில், பழநி ஆண்டவர் கோயில் அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் வயிற்று நோய் நீங்கும் என்று பலரும் அறிவுறுத்த, அர்த்தநாரி தன் மனைவியுடன், பிழைத்திருந்த நரசிம்மன் என்னும் ஒரே ஆண் குழந்தையுடன், 1908-ஆம் ஆண்டு பழநிக்கு வந்து சேர்ந்தார். பழநி கோயில் அபிஷேக தீர்த்தம் கொண்டு வருதல், பூஜைக்கு உதவுதல் முதலான தொண்டுகளில் ஈடுபட்டார்.

 பழநி முருகனின் அருளால் அவரது குன்ம நோய் நீங்கியது. அக்காலத்தில், பழநியாண்டவரின் தினசரி அபிஷேக ஆராதனை வழிபாட்டில் தாசிகள் நடனமாடுவது வழக்கம். அப்படி ஒருநாள் ஒருத்தி வங்கார மார்பிலணி என்று தொடங்கும் திருச்செங்காட்டங்குடி திருப்புகழைப் பாடி நடனம் ஆடினாள். அந்தப் பாடலில் வரும் சிங்கார ரூப மயில்வாகன நமோநம என்று வரும் வரிகளை அவள் பாடியபோது, அர்த்தநாரியின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. மெய்மறந்து இருந்தார் அவர். படிப்பறிவு இல்லாததால் அந்தப் பாடலை எழுதி வாங்கிக் கொண்டு, அதனைப் பாராயணம் செய்யலாம் என்ற மனநிலைக்கு வந்தார் அர்த்தநாரி. அதோடு, திருப்புகழ் பாடி இறைவனைத் துதிக்க  வேண்டும் என்ற ஆவலும் அவருக்கு உண்டாயிற்று. அப்போது, அவருக்கு வயது 42.

முருக பக்தியால் அர்த்தநாரியின் ஆன்மிகத் தேடல் அதிகரித்தது. பழநியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை மற்றும் பல தலங்களுக்குச் சென்று தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்து வரும் நாளில், கந்தன் அவரது கனவில் தோன்றி, சீரலைவாய்க்கு வருமாறு அழைத்தான். அதன்படி, செந்துர் கந்தனைத் தொழுத அர்த்தநாரி, இலங்கை சென்று அங்குள்ள சில தலங்களையும் வழிபட்டு மீண்டும் அண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி ஆசி பெற்றார். பிறகு, நான்கு ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்தார்.  1916-ஆம் ஆண்டில் மீண்டும் திருவண்ணாமலை வந்து சேர்ந்த அர்த்தநாரி, பவழக்குன்றில் இருந்த ரமண மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார். இவரைப் பார்த்ததுமே கீழே போங்கள், சீக்கிரம்! என்றார் மகரிஷி. வந்ததும் வராததுமாக எதற்குத் தம்மை கீழே இறங்கச் சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே, இதோ போகிறேன் என்று கீழே இறங்கினார் அர்த்தநாரி. அப்போது,அங்கிருந்த மகான் சேஷாத்ரி சுவாமிகள் ஓடி வந்து இவரைக் கட்டித் தழுவி, மடிமேல் உட்கார வைத்துக்கொண்டு, ஆத்மாத்வம் கிரிஜாமதி... என்று தொடங்கும் சிவ மானச பூஜா ஸ்லோகத்தை உபதேசித்தார். மேலும், உம்முடைய பெரியவர்களும் சந்நியாசிகள்தானே? என்று கேட்டுவிட்டு, உமக்குத் திருப்புகழ்தான் மகா மந்திரம். வள்ளி மலைக்குச் செல்! என்று உத்தரவிட்டார் அந்த மகான். உடனே, வள்ளிமலைக்குச் சென்றார் அர்த்தநாரி.

வள்ளிமலை என்பது முருகப்பெருமானின் இச்சா சக்தியான வள்ளி பீடம். வள்ளிமலையில் பர்வதராஜன் குன்றுக்கும் கன்னிக் குன்றுக்கும் இடையே தமது திருப்புகழ் ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு, அங்கு வரும் அனைவருக்கும் திருப்புகழை ராக, தாளங்களுடன் போதித்து வந்தார். அவரது புகழ் வேகமாக பரவியது. வள்ளிமலை சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்றெல்லாம் மக்கள் அவரை அன்போடும் பக்தியோடும் அழைக்கலாயினர். சென்னைக்கு வரும்போதெல்லாம், லிங்கிச் செட்டித் தெருவில் இருந்த தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை இல்லத்தில் தங்குவார் அவர். தணிகைமணியின் தந்தையார் வடக்குப்பட்டு சுப்ரமண்ய பிள்ளையவர்கள்தான் திருப்புகழ் சுவடிகளைத் தேடி எடுத்து முதலில் அச்சிட்டவர். தணிகைமணியவர்கள் அருணகிரியாரின் திருப்புகழ் முதலான அனைத்து நூல்களுக்கும் உரையெழுதி வெளியிட்டுள்ளார். எனவே, அவரது இல்லத்தை திருப்புகழ் தாயகம், தாய்வீடு என்று வள்ளிமலை சுவாமிகள் கருதுவார். அக்காலத்தில்தான் ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஆங்கில துரைமார்களைப் பார்ப்பதற்குப் பதில் தணிகை துரையைத் தரிசிக்கவேண்டும் என்ற பிரசாரத்தை ஏற்படுத்தினார் வள்ளிமலை சுவாமிகள். அவர் தவம் செய்த இடம் திருப்புகழ் ஆஸ்ரமம் என்ற பெயரில் அன்னம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கிறது. அவரது வள்ளி கல்யாண உபன்யாசம் மிகவும் பிரசித்தமானது. திருப்புகழை மகாமந்திரமாகக் கொண்டு, அதனை ஓயாது ஓதி வந்தால் அடியார்களது மனக்கவலைகள் நீங்கவும், வியாதிகள் நீங்கவும் வழி பிறக்கும்படி செய்தார். அவர் வகுத்த வேல் மாறல் என்னும் வேல் வகுப்பு பாராயணம் மனக்கோளாறு, உடற்கோளாறு, பில்லி, சூன்யம் முதலான எல்லா துன்பங்களையும் நீக்கும் மகாமந்திரமாகும்  1941-ஆம் ஆண்டு முதல், சென்னையிலும் வள்ளிமலையிலும் சுவாமிகள் வசித்து வந்தார். சென்னை வடதிருமுல்லை வாயிலில் வைஷ்ணவி ஆஸ்ரமத்தில் வைஷ்ணவியை பிரதிஷ்டை செய்தார். ஆண்டுதோறும் நவராத்திரி விழா அங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1950-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஸ்ரீ ரமண மகரிஷி மகா சமாதியடைந்தார். அதே ஆண்டு கார்த்திகை அஸ்வினி, திரயோதசியில் 22.11. 1950 அன்று வள்ளிமலை சுவாமிகள் தம் தேகத்தை உதறிவிட்டு, கைவல்ய சமாதியடைந்தார். வள்ளிமலையில் எந்தக் குகையில் அவர் அதிக காலம் தவம் செய்து திருப்புகழ் பாடிக் காலம் கழித்தாரோ, அதே குகையில் அவரது சமாதி அமைந்துள்ளது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar