பதிவு செய்த நாள்
11
செப்
2013
10:09
சென்னை: ரூ. 9 லட்சம் ரூபாய் செலவில், நித்யானந்தா, சிவசேனா கட்சி மற்றும் பொதுமக்கள் நன்கொடையில் 19 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட வெள்ளி விநாயகர் சிலை, சென்னை புளியந்தோப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பில், பிரகாஷ்ராவ் காலனியில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இந்த ஆண்டு, அந்த காலனியில் 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தியை வித்தியாசமாக கொண்டாட தீர்மானித்த, பகுதிவாசிகள் மற்றும் சிவசேனா கட்சியினர், 9 லட்சம் ரூபாய் செலவில், 19 கிலோ எடையில், 3 அடி உயரம் கொண்ட வெள்ளி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இதுகுறித்த சிவசேனா மாநில அமைப்பாளர் கலைவாணன் கூறியதாவது: இந்த காலனியை சேர்ந்தோர், நித்யானந்தாவின் முதன்மையான சீடர்கள் என, பலரும் கொடுத்த நன்கொடையில், இந்த விநாயகரை உருவாக்கியுள்ளோம். இந்த விநாயகர் சிலை மூன்று மாதங்களுக்கு முன் நித்யானந்தரின் ஆசிரமம் மூலம் உருவாக்கப்பட்டது. வரும், 14ம் தேதி, வரை விநாயகர் சிலை பொதுமக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும். அன்று மாலை, காசிமேட்டில், கடலில் படகு மூலம் 10 கி.மீ., தூரம் சென்று சிலை, கடலில் போடப்படும். அதற்காக, போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இந்த விநாயகருக்கு வினை தீர்க்கும் விநாயகர் என, பெயர் வைத்துள்ளோம். எங்கள் பகுதி மக்களின் நலனுக்காக, யாகம் செய்து, ரூ.9 லட்சம் செலவழித்து வெள்ளியில் தயாரித்த விநாயகரை கடலில் விடுகிறோம். அது யாருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம் என்று தான் நாங்கள் கருதுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து வெள்ளி விநாயகரை பார்க்க ஏராளமான பக்தர்கள், அங்கு சென்று வருகின்றனர்.