பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
திருவனந்தபுரம்: குருவாயூர், சபரிமலை உள்ளிட்ட, கேரள கோவில்களில் உள்ள தங்கத்தைக் கைப்பற்ற, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால், பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான தங்கம் பற்றிய விவரங்களை, ரிசர்வ் வங்கி கேட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால், இந்திய பொருளாதாரம் தள்ளாடத் துவங்கியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், கடுமையாக உயர்ந்து வருகின்றன. மத்திய அரசு, கடும் நிதிப் பற்றாக்குறையால், திணறி வருகிறது.நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அதிக அளவிலான தங்கத்தை இருப்பு வைக்க, ரிசர்வ் வங்கி மூலமாக, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட, திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான கோவில் நிர்வாகத்துக்கு, ரிசர்வ் வங்கி, சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளது.அதில், "உங்கள் கோவில்களுக்கு சொந்தமாக, எவ்வளவு தங்கம் உள்ளது; பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி, தற்போது உங்களின் கைவசம் உள்ள தங்கம் எவ்வளவு என்பது பற்றிய விரிவான அறிக்கையை, எங்களுக்கு அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வருவாய்: ரிசர்வ் வங்கியின் இந்த கடிதம், கேரள மாநில பக்தர்களிடமும், பொதுமக்களிடமும், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குருவாயூர் கிருஷ்ணன் கோவில், நாட்டிலேயே, அதிக வருவாயுள்ள கோவில்களில் ஒன்று. இங்கு, பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், அதிக அளவில் இருப்பு உள்ளது.இதைக் கைப்பற்றும் நோக்கத்திலேயே, ரிசர்வ் வங்கி, இந்த தகவல்களை கேட்டுள்ளதாக, பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, குருவாயூர் கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கியிடமிருந்து, இது போன்ற கடிதம், இதற்கு முன், எப்போதும் எங்களுக்கு வந்தது இல்லை. தற்போது தான், முதல் முறையாக வந்துள்ளது. நாட்டில், பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த கடிதம், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.ரிசர்வ் வங்கியின் இந்த கடிதத்துக்கு, இப்போது பதில் அளிக்கப் போவது இல்லை. கோவிலின் நிர்வாகக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டி, மாநில அரசுடன், ஆலோசித்த பின், ரிசர்வ் வங்கிக்கு பதில் அளிப்பது குறித்து, முடிவெடுக்கப்படும். கோவில் நிர்வாகக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
லாக்கரில் பாதுகாப்பு: கோவிலுக்கு சொந்தமான தங்கம் மற்றும் நகைகள் குறித்த விவரங்கள் பற்றி, எங்களிடம் துல்லியமான தகவல்கள் உள்ளன. இதற்காக, முறையான கணக்கு வைத்துள்ளோம். இது குறித்த ஆவணங்களையும் பராமரித்து வருகிறோம். கோவிலுக்கு சொந்தமான நகை முழுவதும், லாக்கரில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, கேரளாவில் செயல்படும் இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, குருவாயூர் கோவில் நிர்வாகத்துக்கு, அந்த அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோளில், கோவிலுக்கு சொந்தமான தங்கத்தை, ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை; அது பற்றிய, விவரத்தையும் தெரிவிக்க வேண்டியதில்லை. எனவே, ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை, புறக்கணிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர், அல்பனா கில்லவாலா கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான தங்கம் பற்றிய விவரங்களைக் கேட்டது உண்மை தான். ஆனால், புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காகத் தான், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே தவிர, தங்கத்தை கைப்பற்றும் திட்டம் எதுவும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.