பதிவு செய்த நாள்
11
செப்
2013
11:09
ஆர்.கே.பேட்டை: ஜாத்திரை திருவிழாவிற்கு கங்கையம்மனை வரவேற்ற பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட வேண்டிய காரணத்தால், பிள்ளையாரை அவசரகதியில் வழியனுப்பி வைத்தனர். ஆர்.கே.பேட்டை பகுதியில், வங்கனூர், அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், விளக்கணாம்பூடி, கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. நடுத்தெருவில் அமைக்கப்பட்ட வேப்பிலை குடிலில், உற்சவர் அம்மன் அமர்த்தப்பட்டார். காலை, மாலை என, கரகம், கிராமத்தை சுற்றி வந்தது. பெண்கள் நேற்று முன்தினம் மாவிளக்கு ஏற்றி, விரதத்தை துவக்கினர். நேற்று இரவு 8:00 மணியளவில், அம்மனுக்கு கும்பம் செலுத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் வேப்பிலை ஆடை உடுத்தி வந்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக, ஆடு, கோழி உள்ளிட்டவை பலியிடப்பட்டன. இன்று காலை, கங்கையம்மனை, கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆர்.கே.பேட்டையில் நாளை இரவு, திரவுபதியம்மன் உற்சவமும், ெவள்ளிக்கிழமை பொன்னியம்மன் உற்சவமும் நடக்கிறது. இந்நிலையில், திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. வீடுகளில், களிமண் விநாயகர் சிலைகள் வைத்து, பூஜை நடத்தினர். புதன்கிழமை விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கப்படுவதாக இருந்தது. இதனிடையே, நேற்று அம்மனுக்கு கருவாட்டு குழம்புடன் அசைவ படையலும், ஆடு, கோழி பலியிடப்படுவதும் இருந்ததால், திங்கள்கிழமை மாலையே, விநாயகரை, பக்தர்கள் நீர்நிலைகளில் எடுத்துச் சென்று கரைத்தனர்.