பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
காங்கயம்: காங்கயம் தாலுகாவில், கோவில்களுக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 ஏக்கர் நிலம், அறநிலையத்துறை அதிகாரிகளால், மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகாவில், பழமையான கோவில்கள் அதிகளவில் உள்ளன. இக்கோவில்களுக்கு சொந்தமாக, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.தமிழக அரசு உத்தரவின் படி, கோவில் நிலங்கள் குறித்து ஆய்வு செய்ததில், சிவன்மலை, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, நால்ரோடு கிராமத்தில், 10.6 ஏக்கர் நிலம் உள்ளதும், நல்லி கவுண்டன்வலசை சேர்ந்த, ஐந்து பேர் ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக விவசாயம் செய்ததும் தெரிய வந்தது.இதையடுத்து, கோவில் செயல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள், அவர்களிடமிருந்து நிலத்தை, நேற்று மீட்டனர். மடவிளாகம், ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, பாப்பினி கிராமத்தில், 16 ஏக்கர் மற்றும் 92 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, மாந்தோப்பு அமைத்திருந்த, சின்னசாமியிடமிருந்து நிலம் மீட்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், "கோவில்களுக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 ஏக்கர் நிலம், ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில், இரண்டு கோவில்களுக்கு சொந்தமான, 104 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கோவில் நிலங்களும் விரைவில் மீட்கப்படும் என்றனர்.