பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
சேலம்: விநாயகர் சதுர்த்தியொட்டி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, ஏராளமான விநாயகர் சிலைகள், நேற்று, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. சேலத்தில், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம், நேற்று நடந்தது. சேலம் குமாரசாமிப்பட்டி, எல்லைப்பிடாரியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கிய ஊர்வலம், வின்சென்ட், அஸ்தம்பட்டி, மணக்காடு, சின்னதிருப்பதி வழியாக மூக்கனேரியில் முடிவடைந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட வாகனங்களில், 25க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. முடிவில், மூக்கனேரியில், விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.
* சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மூக்கனேரி, புது ஏரி, அம்மாபேட்டை ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில், நேற்று விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.
* ஹிந்து முன்னணி சார்பில், எல்லைப்பிடாரி அம்மன் கோவிலின் அருகே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சில நாட்களாக பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த சிலைகள், நேற்று மாலை, ஊர்வலமாக எடுத்துச் சென்று, கன்னங்குறிச்சி ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
சேலம், அஸ்தம்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் துவங்கிய ஊர்வலம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, கன்னங்குறிச்சி வழியாக ஏரியை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில், தாரை, தப்பட்டை முழங்க, 13 வாகனங்களில், 60 விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டது. கன்னங்குறிச்சி ஏரியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.
* சேலம், சீலநாயக்கன்பட்டி, மல்லூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை, வேன், டெம்போ, மினி ஆட்டோ, லாரிகள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
* தும்பல், அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை, வேன், லாரிகளில் எடுத்து வந்து, கரியக்கோவில் அணையில், போலீஸ் பாதுகாப்புடன், பக்தர்கள், விசர்ஜனம் செய்தனர்.
* ஆத்தூர், நரசிங்கபுரம் நகர் மற்றும் கிராம பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை, மேட்டூர், பவானி காவிரி ஆற்றில், விசர்ஜனம் செய்வதற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
* ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சப்தாவரணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், வெள்ளி கவசம், தானியம், சந்தன காப்பு என, மூன்று வித சிறப்பு அலங்காரத்தில், வெள்ளை விநாயகர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* விநாயகர் சதுர்த்தியையொட்டி, வாழப்பாடி அடுத்த பேளூரில், 20 இடங்களில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வாழப்பாடி பேரூராட்சி பகுதியில், 20 விநாயகர் சிலைகள், பல்வேறு அமைப்பினர் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை அடிவாரத்தில், வசிஷ்ட நதியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
* தம்மம்பட்டி, கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி, உலிபுரம், தகரப்புதூர் ஆகிய ஊர்களில், 49 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள், இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மொடக்குப்பட்டி குளத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
அசம்பாவிதங்கள் தடுக்க, மாவட்டத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.