பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
உடுமலைப்பேட்டையில் இருந்து, பல்லடம் போகும் வழியில் உள்ள கோட்டமங்கலத்தில், பெரும் கற்கால குடியிருப்பு பகுதி, இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட, மண்பாண்ட சில்லுகள், ஊதுகுழல் போன்றவை, ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து, பல்லடம் போகும் வழியில் உள்ளது, கோட்டமங்கல கிராமம். இதில், ஏற்கனவே, பல்வேறு ஆய்வுகளில், வரலாற்றுச் சான்றுகள் கிடைத்தன. இரண்டு வாரங்களுக்கு முன், கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி கல்வெட்டியல் பட்டயப் படிப்பு பேராசிரியர், ரவி, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதில், பெருங்கற்கால குடியிருப்பு பகுதிகள், அங்கு இருந்ததற்கான, இரண்டு கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காலம், கி.மு., 1500. ஆய்வில், ஊரின் தென்மேற்கு பகுதியில், வரலாற்றுக்கு முற்பட்ட, கி.மு., 500ல், குடியிருப்புகள் அங்கு இருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. மேற்பரப்பில், இரும்பு கசடுகளும், மண்பாண்ட சில்லுகளும், குடியிருப்பு பகுதிகளில், சிதறிக் கிடந்துள்ளன. மேலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இரும்பை உருக்கியதற்கான, ஊதுகுழலில் ஒரு பகுதியும், கண்டறியப்பட்டது.
இது குறித்து, பேராசிரியர் ரவி கூறியதாவது: இரும்பு கசடுகள், அதிக எண்ணிக்கையில் கிடைப்பதின் மூலம், இரும்பு கருவிகள் அல்லது ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் திறன் பெற்றவர்களாக, இம்மக்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அங்கு, 25 ஏக்கர் பரப்பளவில், கருப்பு, சிவப்பு மண்பாண்ட சில்லுகள், சிதறி காணப்படுவதன் மூலம், மண்ணைச் சுட்டு, மண்பாண்டங்கள் செய்கிற, தொழில்நுட்பத்தையும் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள், அறிந்திருப்பதை அறியலாம். நேர்த்தியான மண்ணைக் கொண்டு, சக்கரத்தின் துணையுடன் செய்யப்பட்டு, நன்கு சுடப்பட்டு, வண்ணப்பூச்சு பூசப்பட்ட மண் கலங்கள், மேற்பரப்பில் அதிக அளவில் சேகரிக்கப்பட்டன. பெருங்கற்கால மண்பாண்டச் சில்லுகள், தொல்லியல் ஆய்வாளர்களின் உயிர் நாடியாக விளங்குகின்றன. பெருங் கற்கால பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு, இவையே பெரிதும் துணை புரிகின்றன. இம்மண்பாண்டங்கள், இரும்பு கால நாகரிகம், தமிழகத்தில், கி.மு.500 க்கும், கி.பி., 300க்கும் இடைப்பட்ட காலம் என, கணிக்கப்பட்ட காலத்தில், கோட்டமங்கல நாகரிகம், தென் கொங்கு பகுதியில், வரலாற்று காலத்துக்கு முன்பே, சிறப்பு பெற்றிருந்ததை இச்சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -