பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
புதூர்: சுவாமி விவேகானந்தர் கூறியது போல, இளைஞர்களே இந்தியாவின் இரும்புத் தூண்கள்; ஆதாரமாகவும், ஆணிவேராகவும் உள்ள அவர்களை பயன்படுத்திக் கொண்டால், நாடு வளர்ச்சி பெறும், என, மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசினார். விவேகானந்தர் செப்., 11 ல், சிகாகோவில் பேசிய நாளான நேற்று, "சிகாகோ தினமாக அனுசரிக்கப்பட்டது. மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் தலைமை வகித்தார். தேவிப்பட்டினம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி செயலர் சந்திரசேகரன், கோயம்புத்தூர் சின்மயாமிஷன் சிவயோகானந்தர், திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் இளங்கோ பேசினர். கமலாத்மானந்தர் பேசியதாவது: "இளைஞர்கள் நாட்டுப் பற்று உள்ளவர்களாக திகழ வேண்டும் என, விவேகானந்தர் கூறினார். அவரைப் பற்றி அறிந்து கொண்டாலே, இளைஞர்கள், எதிர்கால இந்தியாவை தாங்கும் இரும்புத் தூண்களாக விளங்க முடியும். விவேகானந்தரின் கருத்துக்கள் எல்லையற்ற ஆற்றலின் சுரங்கம். இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர், இந்தியாவின் பெருமைமிக்க பாரம்பரியத்தை, இளைஞர்களிடம் ஒப்படைத்துள்ளார். இளைஞர்கள், மாணவர்கள் வலிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.திசை தெரியாமல் தடம் மாறும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக, விவேகானந்தரின் அறிவுரைகள் உள்ளன. அவரின் அறிவுரைகளை பின்பற்றினால், இளைஞர்களால் வளமான இந்தியாவை உருவாக்கலாம், என்றார்.