பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஒகேனக்கல் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 9ம் தேதி, 715 இடங்களில் ஹிந்து அமைப்புகள், இளைஞர் சங்கங்கள், பொது மக்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தது. கடந்தாண்டு மாவட்டத்தில், 715 சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, பக்தர்கள் கூடுதல் சிலைகளை வைத்து வழிபட போலீஸாரிடம் அனுமதி கேட்டனர். மாவட்டத்தில், 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால், போலீஸார் பக்தர்களுக்கு கூடுதல் சிலைகளை வைக்க அனுமதி வழங்கவில்லை. மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பக்தர்கள் வைத்து வழிப்பட்டு வந்த, 715 சிலைகளுக்கும் பக்தர் போலீஸாரின் நிபந்தனை படி பக்தர்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தியை அன்று பக்தர்கள் வைத்து வழிப்பட்ட, 715 விநாயகர் சிலைகளில், மூன்றாம் நாளான நேற்று பெரும்பாலான சிலைகளை ஒகேனக்கல் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்ய பக்தர்கள் எடுத்து சென்றனர். மேலும், மாவட்டத்தில் தொப்பையாறு, வாணியாறு, நாகவதி அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய பக்தர்கள் வாகனங்களில் எடுத்து சென்றனர்.
மாவட்டத்தில், 144 தடை உத்தரவு காரணமாக பக்தர்களின் ஊர்வலத்திற்கு போலீஸார் தடை வித்தனர். மேலும் சிலையை எடுத்து செல்லும் வாகனங்களில், ஐந்து பேரை மட்டும் போலீஸார் அனுமதித்தனர். இதனால், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் விநாயகர் சிலைகளை அமைதியாக நீர் ஆதாரங்களுக்கு எடுத்து சென்றனர். பக்தர்களை கண்காணிக்க தர்மபுரியை அடுத்த சோகத்தூர் கூட்டுரோடு, பென்னாகரம் கூட்டு ரோடு, மடம் செக்போஸ்ட், ஒகேனக்கல், ஆலம்பாடி, ஊட்டமலை ஆகிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில், தண்ணீர் வரத்து வினாடிக்கு, 11,300 கனஅடியில் இருந்து நேற்று, 13 ஆயிரத்து, 600 கனஅடியாக உயர்ந்தது. இதனால், பக்தர்கள் சிலைகளை கரைக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊர்காவல் படையினர் மற்றும் மீட்பு குழுவினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, கேரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேற்று (செப்., 11) மாலை, 3.30 மணி வரை, 620 சிலைகளை காவிரியில் விசர்ஜனம் செய்தனர். மாலை, 3.30 மணிக்கும் மேலும் ஒரு சில பக்தர்கள் ஒகேனக்கல் காவிரியில் சிலைகளை விசர்ஜனம் செய்ய விநாயகர் சிலைகளை எடுத்து வந்தனர். பாதுகாப்பு பணிகளை எஸ்.பி., ஆஸ்ராகார்க் நேரில் ஆய்வு செய்தார்.