பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
ஆர்.கே.பேட்டை:ஆண்டுதோறும் கங்கையம்மன் திருவிழாவில், மழை பொழியும். அது போல, இந்த ஆண்டும் மழை பெய்ததால், பக்தர்கள் பரவசத்தில் உள்ளனர். ஆர்.கே.பேட்டை, கங்கையம்மன் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, எல்லை பொங்கலுடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, கரகம், பொங்கல் வழிபாடு, கூழ் வார்த்தல் ஆகியவை நடந்தன. மாலை 7:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட உற்சவர், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பஜார் சந்திப்பில், வேப்பிலை குடிலில் அமர்த்தப்பட்டார். முக்கிய நிகழ்வான கும்பம் படைத்தல், இரவு 8:00 மணிக்கு நடந்தது. இதில், ஆண், பெண், குழந்தைகள் என, 1,000 பேர் திரண்டு வந்து அம்மனுக்கு கும்பம் படைத்தனர். வேப்பிலை ஆடையணிந்து, தீச்சட்டி, மாவிளக்கு ஏந்தியும், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள், அம்மன் குடிலை நெருங்கியதும், பலத்த மழை பெய்யத் துவங்கியது. கொட்டும் மழையில் பக்தர்கள், அம்மனை வழிபட்டு சென்றனர். விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதுகுறித்து, கிராமத்தினர் கூறுகையில், ‘பருவ மழை துவங்கும் போது, கங்கையம்மனுக்கு திருவிழா நடத்துவதன் காரணமே, நல்ல மழைப்பொழிவு வேண்டும், அனைத்து தொழில்களும் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காகவே தொன்று தொட்டே, அம்மனுக்கு கும்பம் படைத்தவுடன் மழை பொழிவது வழக்கமாக உள்ளது. இதே நாளில், ஆண்டுதோறும், மழை பெய்வது தெய்வ செயல்’ என்றனர்.