பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
நாமக்கல்: சுவாமி விவேகானந்தரின், 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பாரத விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், நாமக்கல்லில், நேற்று நடந்தது. விழாக்குழு மாவட்டத் தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார், ராமகிருஷ்ண ஆஸ்ரமம் பூர்ண சேவானந்த மஹராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: சுவாமி விவேகானந்தரின் பேச்சு இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்தது. அவர், பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகியவற்றை கற்றறிந்தார். சிகாகோ நகரில் ஆற்றிய பேருரை, உலக புகழ் பெற்றது. முதன் முறையாக, "பிரதர், அண்டு சிஸ்டர்ஸ் என பேசினார். அதை தொடர்ந்து, இந்து சமயத்தைப்பற்றி, அவர் ஆற்றிய உரை, இன்றளவும் போற்றப்படுகிறது. அது அழியா பேருரையாக திகழ்கிறது. மக்கள் சேவையே, மகேசன் சேவை என்பது உணர்த்தினார். ஏழைகளுக்கு உதவி செய்வது, இறைவனுக்கு செய்ததற்கு இணையானது என்பது அறிவுறுத்தினார். இன்றைய மாணவர்கள், விவேகானந்தரின் கொள்கைகளை பின்பற்றினால், வாழ்க்கையில், பல்வேறு சாதனைகளை படைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி துவங்கியது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் துவங்கிய பேரணி, அண்ணாதுரை சிலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, சேலம் சாலை, கடைவீதி, மணிக்கூண்டு வழியாக மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது. விழாக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.