பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
சேந்தமங்கலம்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழா, செப், 14 கோலாகலமாக துவங்குகிறது. அதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், புதன்சந்தை அருகே நைனாமலை உள்ளது. இங்கு, 1,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில், பல்லவர் மன்னரால் கட்டப்பட்டதாக, வரலாறு கூறுகிறது. மேலும், கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து, மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில் வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும். மலைப்பாதையில், வற்றாத ஊற்றுகளான, "அரிவாள் பாழியும் மற்றும், "அமையா தீர்த்தம் எனும், "பெரிய பாழியும் அமைந்துள்ளது, இக்கோவிலின் சிறப்பு. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரலற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாப்படுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்வர். அதில், மூன்றாவது வாரம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரிக்கும். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா, செப் 14 கோலாகலமாக துவங்குகிறது. முதல் வாரம் என்பதால், அதிகாலை முதலே, பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலையேறி மலைக்கோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் ஸ்வாமியை வழிபட்டுச் செல்வர். மலை மீது ஏற முடியாத பக்தர்கள், அடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கியபடி, நிற்கும் ஆஞ்சநேயர் ஸ்வாமியை வழிபடுவர். புரட்டாசி திருவிழா, செப்டம்பர், 21, 28ம் தேதியும், அக்டோபர், 5, 12ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.