பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
நாகர்கோவில்:இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக மலையாள மக்களின் வீடுகளில், அத்தப்பூ என்ற பூக்களம் களை கட்டுகிறது. சபரிமலையில் இன்று ஒண விருந்து நடைபெறுகிறது. வாய்மை தவறாமல் ஆட்சி செய்து வந்த, மகாபலி மன்னனிடம், மூன்றடி நிலம் கேட்ட சிறுவனுக்கு, தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார் மன்னர். அடுத்த கணம், பெரிறய உருவமாக மாறி, முதல் அடியில், ஆகாயத்தையும், இரண்டாவது அடியில், பூமியையும் அளந்து விட்டு, மூன்றாவது அடிக்கு, இடம் கேட்ட போது, மகாபலி தனது தலையை கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றினார். அவ்வாறு பூமிக்குள் மறையும் முன்னர், மகா விஷ்ணுவிடம் எல்லா ஆண்டும், ஓண நாளில், மக்களை காண வரவேண்டும் என்ற வரத்தை கேட்டு பெற்றார். இதுதான் ஓணத்தின் வரலாறு. தன் மக்களை காண வரும் மன்னனிடம், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்தவே அத்தப்பூ, ஊஞ்சல் என, ஓணம் களை கட்டுகிறது. இன்று காலையிலேயே புத்தாடை அணிந்து, கோவில்களில் வழிபாடுகள் நடத்தி, பல்வகை பதார்த்தங்களுடன் உணவு உண்பதும், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் தானம் கொடுப்பதும், ஓணத்தின் சிறப்பம்சங்களாகும். கேரளாவில் அரசு சார்பில் எல்லா மாவட்டங்களிலும், ஓண கலைவிழா நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஓணத்துக்கு, 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சபரிமøயில் ஓண விருந்து:ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலையில் திறந்தது. நேற்று காலை முதல் நெய்யபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமனபூஜை நடைபெற்று வருகிறது. இன்று 5,000 பக்தர்களுக்கு, ஓண விருந்து அளிக்கப்படுகிறது. 21ம் தேதி வரை சபரிமலை நடை திறந்திருக்கும். ஓணத்தையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று காலை மட்டும் 100 டன் பூக்கள் விற்பனையானது.