பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி தேரோட்ட விழா நேற்று வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்று வழிபட்டனர். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில். இங்கு, பழனி முருகனுக்கு காவடி எடுத்து பாதயாத்திரை வருவது போல, பக்தர்கள் திரளாக வந்து அம்மனை வழிபடுவர். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மூலஸ்தான அம்மன் புற்று மண்ணால் உருவானது. அதனால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வது இல்லை. தைலக்காப்பு மட்டும் சாற்றப்படுகிறது. அம்மனுக்கு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடக்கும். இச்சமயத்தில் ஒரு மண்டலம் அம்பாளை, ஒரு வெள்ளை திரையில் வரைந்து, ஆவாஹணம் செய்து, அதற்கு மட்டுமே அர்ச்சனை, ஆராதனை செய்யப்படும். அப்போது மூலஸ்தான அம்மனுக்கு, 48 நாட்களிலும் தினமும், இரண்டுவேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகிய அபிஷேகம் செய்யப்படும். தைலாபிஷேகம், தைலக்காப்பு நேரங்களில் அம்பாளுக்கு வெப்பம் அதிகரிக்கும். இதை தவிர்க்கும் வகையில், தயிர்பள்ளயம், இளநீர் வைத்து, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுவதும், உள்தொட்டி மற்றும் வெளித்தொட்டி, இரண்டிலும் நீர் நிரப்பி, அம்பாள் வெப்பம் தணிப்பதும், ஐதீகப்படி வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் அம்பாள் முகம் மற்றும் தலையில், முத்து, முத்தாக வியர்வை வியர்க்கும். பிறகு தானாகவே இந்நிலை மாறி விடும். இதனாலேயே தஞ்சையை அடுத்து வீற்றிருக்கும் அம்மனை, முத்து மாரியம்மன் என பக்தர்கள் அழைக்கின்றனர். மேலும் நித்தியபடி விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்ஸவ மூர்த்திக்கும் அபிஷேகம் செய்யப்படும். காலை, 5.30 மணி முதல், இரவு, 9 மணி வரை, நடை திறக்கப்படும். ஆகம விதிப்படி தினமும், நான்குகால பூஜைகள் நடத்தப்படும். இதுதவிர, ஆண்டுதோறும் ஆடி மாதம் முத்துப்பல்லக்கு, ஆவணி மாதம் வருடாந்திர திருவிழா, கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் தெப்பேற்ஸவம், நவராத்திரி திருவிழா நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டு கடந்த ஆக., மாதம், 16ம் கொடியேற்றத்துடன் ஆவணி பெருந்திருவிழா துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் சிம்ம வாகனத்தில் அம்மன் உலா நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 9ம் தேதி முதல், காலையில் படிச்சட்டத்திலும், மாலையில் வாகனங்களிலும் அம்மன் புறப்பாடு நடத்தப்படுகிறது. கடந்த, 14ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. ஆவணி மாதம், 5வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நேற்று தேரோட்ட விழா வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடந்தது. இதில் தஞ்சை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்று, பக்தி பெருக்குடன் அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மஞ்சள் தீர்த்தவாரியும், கொடியிறக்கமும் நடக்கிறது. வரும், 29ம் தேதி தெப்பத்திருவிழாவும், அக்., மாதம், ஒன்றாம் தேதி தெப்ப விடையாற்றி விழாவும் நடக்கிறது. ஏற்பாட்டை கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், அரவிந்தன், குணசேகரன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.