வேதாரண்யம்: சரபோஜிராஜபுரத்தில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி சரபோஜிராஜபுரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோவில், தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி வழிபட்ட கோவிலாகும். இந்த கோவில் திருப்பணிகள் நடந்து, 45 ஆண்டுகளுக்கு பின் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, கடம் புறப்பாடு நடந்தது. நாகை வரதராஜ பட்டாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூல விக்ரகங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் நீதிமணி, தக்கார் ராமதாஸ் மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் கைங்கர்ய சபாவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.