ஆலங்குளம் : ஆலடிப்பட்டி வைத்தியலிங்கசுவாமி, அன்னை யோகாம்பிகை கோயில் ஆவணிதேரோட்டம் நடந்தது.ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கசுவாமி கோயில் ஆவணி திருவிழா நாளில் வைத்தியலிங்கசுவாமி, அன்னை யோகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நாளான 10ம் திருவிழாவில் காலையில் சுவாமி, அம்பாள் பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு விநாயகர் தேரில் வலம் வருதலும் அதனைத் தொடர்ந்து 5 மணியளவில் வைத்தியலிங்கசுவாமி தனித்தேரில் ஆண்கள் வடம்பிடித்து வீதியுலா நடந்தது. தொடர்ந்து 5.30 மணிக்கு அன்னை யோகாம்பிகை தனித்தேரில் பெண்கள் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதிகளில் கூடியிருந்தனர். இரவு 7 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு பூம்பல்லக்கில் வீதியுலா நடந்தது. 11ம் திருவிழாவை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி செல்லுதல், இரவு 9 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு சுவாமி வன்னிமரம் சென்று வருதல் நடந்தது.