பதிவு செய்த நாள்
25
செப்
2013
10:09
பேரூர்: தனியாரின் ஆக்கிரமிப்பிலிருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி உள்ளது. தனியாரின் ஆக்கிரமிப்பில் சிக்கியும், பட்டா நிலமாக மாற்றப்பட்டும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள கோவில் நிலத்தை இந்துசமயஅறநிலையத்துறை நிர்வாகம் கையகப்படுத்த வேண்டுமென சிவபக்தர்கள் நலச்சங்கம், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், பேரூர் அருகே பேரூர் செட்டிபாளையம் மேற்கு தோட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி, 50, பேரூர் கிராமம் சர்வே எண் 37/3, 39/2, 39/3, 39/4, 39/5, 39/6, 39/7 கொண்ட மொத்தம் 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, கோவில் நிர்வாகத்துக்கு புகார் சென்றது. கோவில் நிர்வாகத்துக்கு 12 ஆண்டுக்கு மேலாக குத்தகை பணம் கூட வழங்காமல் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, ஆலயநிலங்கள் சிறப்பு டி.ஆர்.ஓ., குழந்தைவேல், உதவி கமிஷனர் அனிதா, கோவில் தக்கார் கிருஷ்ணசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் முன்னிலையில் நிலஅளவையர் ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் பூமியை அளந்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்தனர். மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியாகும்.