பதிவு செய்த நாள்
25
செப்
2013
10:09
தஞ்சாவூர்: கோவையில் கடந்த ஏப்., மாதம் துவங்கிய ஸ்வாமி விவேகானந்தர் ரத யாத்திரை இன்று (25ம் தேதி) வருவதை முன்னிட்டு தஞ்சையில் 3 நாள் விழா துவங்குகிறது. தொடர்ந்து, ரத யாத்திரை பொதுக்கூட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். தஞ்சைக்கு ஸ்வாமி விவேகானந்தர் ரத யாத்திரை வருகை முன்னிட்டு, தஞ்சை சிட்டிஷன் கமிட்டி தலைவர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் கஜராஜ் குஞ்சிதபாதம், செயலாளர் இந்திரா, கமிட்டி செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் நடராஜன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கமிட்டி தலைவர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் ரத யாத்திரை நடந்து வருகிறது. கடந்த ஏப்., மாதம் 13ம் தேதி கோவையில் ஸ்வாமி விவேகானந்தர் ரத யாத்திரை துவங்கப்பட்டது. இந்த ரத யாத்திரை தஞ்சைக்கு இன்று (25ம் தேதி) வந்தடைகிறது. இதையொட்டி தஞ்சையில் வரும் 27ம் தேதி வரை 3 நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, புதுகை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டையில், ரத வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, தஞ்சையை அடுத்த சாஸ்த்ரா பல்கலை தேவாரம் நகர், பரிசுத்தம் தொழில்நுட்ப கல்லூரி, காவேரி நகர், வினோத் மஹால், பெரியகோவில், ஸ்டேட் பாங்க் ரோடு, கீழவாசல் வழியாக குருதயாள் சர்மா திருமண மண்டபத்தை ரதம் சென்றடைகிறது. மறுநாள் (26ம் தேதி) புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே யாகப்பா பள்ளி, பாரத் கல்லூரி வழியாக ரயில்வே ஸ்டேஷனை ரத யாத்திரை அடையும். இங்கிருந்து புறப்படும் ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கரன், எஸ்.பி., தர்மராஜ், பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். தொடர்ந்து, ஊர்வலம் காவேரி திருமண மண்டபத்தை அடைந்து பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், தஞ்சை சிட்டிஷன் கமிட்டி தலைவர் சுரேஷ் மூப்பனார் தலைமை வகிக்கிறார். திருவையாறு ஸ்ரீ தியாக பிர்ம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் முன்னிலை வகிக்கிறார். மத்திய கப்பல்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் டி.ஜி.பி., கோபாலகிருஷ்ணன், ஸ்வாமி கமலாத்மானந்தாஜி உள்பட பலர் பங்கேற்றனர். வரும் 27ம் தேதி ரத யாத்திரை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், பூண்டி புஷ்பம் கல்லூரி சென்று, குருதயாள் சர்மா திருமண மண்டபத்தை மீண்டும் அடையும். பின்னர், பொதுக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சேதுமாதவன், டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்று, பேசுகின்றனர்.