பதிவு செய்த நாள்
26
செப்
2013
10:09
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட், இலவசமாக 135 முதியவர்களை திருமலை திருப்பதிக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட, திருமலை திருப்பதி செல்ல வசதி இல்லாத முதியவர்கள் 135 பேரை, ஸ்ரீவாரி டிரஸ்டுடன் இணைந்து, பெருமாள் பக்தர்கள் 10 பேர் அடங்கிய குழுவினர், இலவசமாக அழைத்துச் செல்கின்றனர். திருமலை தரிசனத்துக்கு செல்லும் முதியவர்கள், வரும் 29ம் தேதி காலை 6.30 மணிக்கு, திருப்பூரில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் புறப்படுகின்றனர். இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி, ஆறு வேளை உணவு; ரூ.50க்கான சுதர்சன டிக்கெட், தலா மூன்று லட்டு மற்றும் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைவருக்கும் திருப்பதியில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்காக, டி.எம்.எப்., மருத்துவமனை டாக்டர் தங்கவேல் குழுவினர் உடன் செல்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அடையாள அட்டை, கழுத்தில் அணியும் ஸ்கார்ப் வழங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் திருமலை திருப்பதி செல்ல விரும்பும், வசதி இல்லாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருப்பூர் தாராபுரம் ரோட்டில் இயங்கி வரும், திருமலை திருப்பதி தேவஸ்தான இ- தரிசன முன்பதிவு மைய அலுவலகத்தில், புகைப்படம் மற்றும் அடையாள அட்டை நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 - 2424 401 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்