பதிவு செய்த நாள்
26
செப்
2013
10:09
தேர் செய்யும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தருமபால சோழனால் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். பாகூரில் உள்ள மூலநாத சுவாமி கோவில், முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. பழமைவாய்ந்த இந்த கோவில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவில்களிலும், வீராம்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, செங்கழுநீரம்மன் கோவிலிலும் உள்ள தேர் பழுதடைந்துள்ளது. இக்கோவில்களுக்கு, புதிதாக தேர் செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்த கோவில்களின் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தேர் வடம் பிடித்து இழுப்பதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து விடுவர். செங்கழுநீரம்மன் கோவில் தேர் திருவிழாவன்று, உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று கோவில்களுக்கும் தேர் செய்வதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. புதிய மரம் வாங்கப்பட்டு, பணிகளும் துவங்கியது. மரத்தின் தரத்தை பரிசோதிக்கும் நடைமுறைகள், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாதது, தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் தேர் செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு தேர் செய்வதற்காக, மரங்கள் வாங்கப்பட்டு, பணிகள் துவங்கியது. ஆனால், மரத்தின் தரத்தை உறுதி செய்வது குறித்த பிரச்னையால், பணிகள் துவங்கிய வேகத்திலேயே முடங்கியது. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட மரங்கள் மக்கி கொண்டுள்ளன. வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலுக்கு தேர் செய்வதற்காக, 19 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் மரம் வாங்கப்பட்டு, பணி துவங்கியது. மரத்தின் தரம் தொடர்பாக பிரச்னை எழுந்ததால், தேர் செய்யும் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டது. அதற்கு பின், தேர் செய்வதற்காக கமிட்டிகள் அமைக்கப்பட்டும், பல்வேறு காரணங்களால் பணி இன்றுவரை துவங்கவில்லை. இதுதொடர்பாக கோவில் சார்பில், அரசிடம் மனு தந்தும் பயனில்லை. வாங்கப்பட்ட மரங்கள் மக்கி கொண்டுள்ளதால், பஞ்சாயத்து சார்பில், கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் அடுத்தவாரத்தில் மனு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகூர், மூலநாதர் சுவாமி கோவிலுக்கு, புதிய தேர் செய்வதற்காக, 20 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக தேர் செய்வதற்கான ஷெட் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு இளுப்பை மர கட்டைகள் வாங்கப்பட்டது. போதிய நிதி வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், புதிய தேர் செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், மழையிலும், வெயிலிலும் கிடந்த மரக்கட்டைகள் மக்கி வீணானது. இதற்கிடையே, கோவில் வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய மரங்களை, அறங்காவலர் குழுவினர் நேற்று முன்தினம் ஏலம் விட்டனர். ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மரங்கள், 8500 ரூபாய்க்கு மட்டும் விற்பனையானது. பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தேர் செய்யும் பணிகள் முடங்கி உள்ளதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.