ஊத்தங்கரை: கோவில் கோபுரத்தில் இந்த பஞ்சலோக கலசத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டியில் சக்திவேல் முருகன் கோவில் உள்ளது. இக் கோவிலை சுவாமி ஆதிநந்தா சரஸ்வதி என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10 மணிக்கு பூஜை முடிந்து கோவில் நடையை சாத்திவிட்டு கோவில் அருகில் உள்ள அறையில் ஆதிநந்தா ஓய்வு எடுக்க சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கோவிலில் பூஜை செய்ய அவர் வந்தபோது, கோவில் கோபுரத்தின் மேல் இருந்த பஞ்சலோக கோபுர கலசத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. ஆதிநந்தா ஊத்தங்கரை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர். இதே கோவிலில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஸ்வாமி கழுத்தில் இருந்த மூன்று பவுன் நகையை திருடி சென்றனர். மீண்டும் கொள்ளை நடந்திருப்பது பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.