பதிவு செய்த நாள்
27
செப்
2013
04:09
கொப்பூர்: 108 சிவாலயங்கள் கொண்ட அதிசயமான கொப்பூர் கிராமத்தை, சுற்றுலா தலமாக அரசு அறிவிக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள கொப்பூர் கிராமம். 250 ஆண்டுகளுக்கு முன்பு, கொப்பூர் என்ற இந்தக் கிராமம் திருக்காப்பூர் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில், இது கொப்பூர் என உருமாறி அழைக்கப்பட்டு வருகிறது. கொப்பூர் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜ சுவாமிகள் அவதரிப்பதற்கு முன்பு, இந்த பகுதியில், சைவ சமயத்தை சார்ந்தவர்கள் தான் அதிகமாக வாழ்ந்து வந்தனர். இதனால், இப்பகுதியில், 108 சிவலிங்கம், நந்திகளுடன் கூடிய சிவாலயங்களை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் முன்பும் ஒரு குளம் உண்டு. இந்தக் குளத்தில் உள்ள நீரை கொண்டு, தினமும் சிவாலயங்களில் உள்ள சிவலிங்கத்திற்கும், ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள நந்திக்கும் அபிஷேகமும், பூஜையும் நடத்தப்பட்டது. இவ்வாறு, 108 சிவாலயங்கள் ஒரே பகுதியில் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு வேறு எந்த பகுதியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த பின்பு, இந்தப் பகுதியில் சைவ சமயத்தில் இருந்தவர்கள் அனைவரும் வைணவ மதத்திற்கு மாற ஆரம்பித்தனர். இவ்வாறு அவர்கள், வைணவ மதத்திற்கு மாற ஆரம்பித்ததால், சிவாலயங்களில் பூஜைகள் நடத்த முடியாமல், ஆலயங்கள் பூட்டியே கிடந்தன. இதனால், 108 சிவாலயங்களில் பெரும்பாலனவை சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், இப்பகுதியைச் சேர்ந்தவர், சிவாலயங்கள் இருந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகளாக மாற்றி விட்டனர். மேலும், 108 சிவாலயங்களுக்கு சொந்தமான பல ஏக்கர் இடங்களை, இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து தங்களது நிலங்களாக உரிமை கொண்டாடி வருகின்றனர். மேலும், தற்போது சுமார் 10க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் தான் மக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் உள்ளது. மீதமுள்ள சிவாலயங்களை சுற்றி ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதால், அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை. எனவே, 108 சிவாலயங்களை கண்டு பிடித்து, அவற்றை அனைத்தும் சீரமைத்து, தினமும் வழிபடும் வகையில், ஆலயங்கள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொப்பூர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, 108 சிவாலயங்கள் குறித்து அறிக்கை தயார் செய்து, அரசுக்கு பரிந்துரை செய்து, சீரமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செல்லும் வழி: கோயம்பேடு - திருவள்ளூர் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகள், பூந்தமல்லி - திருவள்ளூர் செல்லும் மாநகர பேருந்துகள்,(தடம் எண் : 597, 596)
பேருந்து நிறுத்தம்: அரண்வாயல்குப்பம் பேருந்து நிறுத்தம்.