பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
சிவகங்கை: மாநில அளவில், தனியாரிடம் இருந்த, 3 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டுள்ளதாக, இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபால் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் கூறியதாவது: சிவகங்கை மண்டலத்தில், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில், 163 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 500 கோயில்களில் திருப்பணிகள் நடக்க உள்ளது. கோயில்களில் கும்பாபிஷேகம், தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 105 கோயில் திருக்குளங்களில், 86 நல்ல நிலையில் உள்ளதால், மற்றவை செப்பனிடப்படும். சோலார் மின் வசதி: முதலமைச்சர் உத்தரவுபடி, மண்டலத்திற்கு 100 கோயில்களில், சோலார் மின்வசதி செய்ய, 5 கே.வி., மின் உற்பத்தி செய்யும், சோலார் பிளான்ட் அமைப்பதற்கு, அரசு 7.50 லட்சம் ரூபாய் வழங்குகிறது. மின் உற்பத்திக்கேற்ப, கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஒரு கால பூஜை கூட நடக்காத கோயில்களில், கிராமத்தினர் பங்களிப்பு தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினால், ரூ.90 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. அதற்கான வட்டியை வைத்தே, முதல் கால பூஜைகளை நடத்தலாம். 3 ஆயிரம் ஏக்கர்: தமிழகத்தில், கோயில் நிலங்களை, தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து, அபகரித்துள்ளனர். அரசு உத்தரவுப்படி, இது வரை 3 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிவகங்கை மண்டலத்தில் ஆக்கிரமித்த ரூ.100 கோடி மதிப்புள்ள 212.57 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது, என்றார். மாநில தனி அலுவலர் (ஆலய நிலம்) ஷியாம்சுந்தர், சிவகங்கை இணை கமிஷனர் முத்து தியாகராஜன் உடனிருந்தனர்.