பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
சென்னை: சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு, விவேகானந்தரின் சேவை எண்ணத்தை பரப்ப, மருத்துவர் மாநாடு, சென்னையில் வரும், 29ம் தேதி நடக்கிறது. சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் சிந்தனைகளை பரப்பும் வகையில், பள்ளி, கல்லூரிகளிலும் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. மருத்துவ சேவை குறித்து விவேகானந்தர் வழங்கியுள்ள கருத்துகளை, மருத்துவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், மருத்துவர் மாநாடு, சென்னையில், வரும் 29ம் தேதி நடக்கிறது. மனிதனுக்கு செய்யும் பணி, கடவுளுக்கு செய்யும் தொண்டு என்ற விவேகானந்தர் சிந்தனையை மையப்படுத்தி நடைபெற உள்ள மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து, 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ், வாரணாசி ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி பிரமிஷ்ஆனந்தாஜி, கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வனவராயர், சுவாமி பரமேஷ் ஆனந்தாஜி, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ சேவை இயக்குனர் சத்யபாபா உள்ளிட்டோர் இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். இலவச மருத்துவ சேவை, மருத்துவ சேவை கிடைக்காத கிராமங்களில், மருத்துவ பணி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உள்ளிட்டவை இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது.