பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது செங்குடி கிராமம். சின்ன ரங்கூன் என்று போற்றப்படும் இங்கு 1900ல் மிக்கேல் அதிதூதருக்கு, குடிசையில் சர்ச் அமைத்து வழிபட துவங்கினர். அப்போது சூராணம், சாலைக்கிராமம், இருதயபுரம், பங்குகளின் கிளை பங்காக செயல்பட்டு வந்தது. 1967 பிப்.,11ல் செங்குடி புதிய பங்காக மலர்ந்தது. அதன்பின் இந்த பங்கின் கீழ் பூலாங்குடி, எட்டியத்திடல், செபஸ்தியார்புரம், ஏந்தல் போன்ற கிராமங்கள் இணைந்தன. அதன் பின் பல பங்குத்தந்தைகள், கிராம மக்களின் ஒத்துழைப்புடன், பிரமாண்டமான சர்ச் கட்டினர். மிக்கேல் அதிதூதர் விழா, இந்தாண்டு செப்.,20ல் 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. புதிப்பிக்கப்பட்ட பீட அர்ச்சிப்பை சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் திறந்து வைத்தார். திருப்பலியை செங்குடி பாதிரியார் சாமுஇதயன் நிகழ்த்தினார். கொடியேற்றத்திற்கு பின் நவநாட்களில் திருப்பலியும், நற்கருணை ஆராதனையும், ஜெபமாலை திருப்பலியும் நடைபெறுகிறது. எட்டாம் நாள் இரவில் தேர்பவனி நடக்கிறது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல்அதிதூதர், அருளானந்தர், தேவமாதா, சூசையப்பர் ஆகியோர் தனித்தனி தேர்களில், முக்கிய வீதிகளின் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடைசி நாளான இன்று(செப்.,29)காலை 8 மணிக்கு, திருவிழா சிறப்பு திருப்பலியை செங்குடி பாதிரியார் சாமுஇதயன் நிகழ்த்துகிறார். மாலை 5 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை செங்குடி பாதிரியார் மற்றும் இறைமக்கள் செய்துவருகின்றனர். கொடியேற்ற விழா துவங்கிய பின், சுற்றுப்புற கிராமங்களில் நெல் உட்பட தானியங்கள் விதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நன்மைகளின் பாதுகாவலராகவும், தீமைகளை அழிப்பவராகவும் மிக்கேல் அதிதூதர் விளங்குவதால் நம்பும் இப்பகுதி மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர்.