வேதம் நான்கு என்றாலும், நான்காவதான அதர்வணத்தை ஒதுக்கிவிட்டு ரிக், யஜுர், சாமம் என மூன்றாக எடுத்துக் கொள்வர். இதில் நடுவில் இருப்பது யஜுர்வேதம். இதிலுள்ள ஏழு காண்டங்களில் நடுவில் இருப்பது, நான்காவது காண்டம். இது இறைவனின் இதயகமலமாகப் போற்றப் படுகிறது. இந்த காண்டத்தின் நடுபாகத்தில், சிவபெருமானைப் போற்றும் நமகம் இடம் பெற்றுள்ளது. இதனை ஸ்ரீருத்ரம் என்பர். ருத்ர மந்திரத்தின் நடுவில் மகாமந்திரமான நமசிவாய உள்ளது. இந்த பஞ்சாட்சர மந்திரமும், சிவனும் ஒன்றே என்பர் அபாயம் நீக்கும் இந்த மந்திரத்தை எப்போதும் நாவால் ஜபியுங்கள் என்பதை நாவினிற்கு அருங்கலம் நமச்சிவாயவே நற்றுணையாவது நமசிவாயவே என்கிறது தேவாரம்.நமசிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க என்று சிவபுராணம் தொடங்குகிறது. மனம் என்னும் கோயிலில் நமசிவாயம் குடியிருந்து அருள வேண்டும் என்பதே இதன் பொருள்.