பதிவு செய்த நாள்
30
செப்
2013
10:09
தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 68வது ஆண்டு தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நேற்று நடந்தது. தஞ்சையை அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் தோன்றி, வளர்ந்த விதம் குறித்து வரலாற்றில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த, 1680ம் ஆண்டில், திருத்தல யாத்திரை மேற்கொண்ட, தஞ்சை மன்னன் வெங்கோஜி கண்ணபுரம் எனும் சமயபுரத்தில் தங்கினார். அப்போது மன்னன் உறங்கியபோது, இரவில் கனவில் அம்பிகை தோன்றி, தஞ்சைக்கு கிழக்குப்புறத்தில் புன்னைக்காட்டில் புற்று வடிவத்தில் உள்ள தன்னை தரிசிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து புன்னை காட்டுக்கு வழியை உருவாக்கி, அம்பிகையின் இருப்பிடத்தை அறிந்து, சிறிய கூரையமைத்து, கிராமத்துக்கு புன்னைநல்லூர் எனும் பெயரிட்டு, கோவில் வளர்ச்சிக்கு கிராமத்தை தானம் அளித்ததாக, பக்தர்கள் கூறுவர். இதைத்தொடர்ந்து, புன்னைநல்லூர் அம்மனுக்கு சிறிய கோவிலை கட்டி, திருச்சுற்று மாளிகையை கடந்த, 1763-1787 ஆண்டுகளில், தஞ்சை மன்னன் துளஜாராஜா அமைத்துள்ளார். இம்மன்னன் தான், சதாசிவ பிரம்மேரிந்தர ஸ்வாமிகளை கொண்டு, புற்று உருவாய் இருந்த அம்பிகைக்கு, சிலை வடிவம் கொடுத்து பிரதிஷ்டை செய்துள்ளார். தொடர்ந்து, 1798-1832ம் ஆண்டுகளில் சரபோஜி மன்னன், கோவிலில் மஹா மண்டபம், நர்த்தன மண்டபம், முன்கோபுரம், பெரிய திருச்சுற்று ஆகியவற்றை கட்டி, அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடத்தினார். இத்தகைய பக்தி வரலாற்று பின்னணியை கொண்ட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தெப்ப மஹோற்ஸவ திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டும் கடந்த செப்., மாதம், 15ம் தேதி தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய அம்சமாக, 68வது தெப்பத்திருவிழா வெகு கோலாகலமாக நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை பக்தி பெருக்குடன் வழிபட்டனர். பின்னர், இரவு வரை நாதஸ்வர இசை, பக்தி இன்னிசை, வயலின் நிகழ்ச்சி உள்பட பல்வேறு இசைநிகழ்ச்சி நடந்தது.