பதிவு செய்த நாள்
30
செப்
2013
11:09
திருத்துறைப்பூண்டி: ராமர் கோவிலில் நடந்த ஏகதின லட்சார்ச்சனை சிறப்பு பூஜையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பெருமாள் அவதாரங்களில் சிறந்த அவதாரமாக ராமர் அவதாரம் கருதப்படுகிறது. இதில் சீதா பிராட்டியை ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்று சிறை வைத்தார். இதையடுத்து, மனைவி சீதா பிராட்டியை தேடி, தென்தமிழகத்தில் திருவாரூரை அடுத்துள்ள தேக்கரை எனும் கிராமத்தில், வில்வாரணீய ஷேத்திரத்தில் குளத்தில் நீராடி, தனது தந்தை தசரதனுக்கு பிண்டம் வைத்து, தர்ப்பணம் செய்து, ஸ்ரீராமர் புறப்பட்டு செல்வதாக ராமாயணம் கூறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருத்துறைப்பூண்டி ஸ்ரீராமர் கோவிலில், ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர், பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றனர். கோவிலில், நேற்றுக்காலையில் ஏகதின லட்சார்சனை சிறப்பு பூஜை காலை, 7 மணிக்கு துவங்கி, மாலை, 7 மணி வரை நடந்தது. இதற்கான பூஜைகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்தனர். வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.