பதிவு செய்த நாள்
03
அக்
2013
10:10
திருவான்மியூர்: கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் அருகில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிறுத்தத்தால், கோவிலுக்கு சென்று வரும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய நிழற்குடை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலின் மேற்கு ராஜகோபுரம் அருகே, ஒரு நவீன நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. கோவில் மதிற்சுவரை ஒட்டி, ராஜகோபுரத்தில் இருந்து, சிறிது துாரம் தள்ளி ஏற்கனவே ஒரு பழைய நிழற்குடை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த நிழற்குடையை அகற்றாமல், ராஜகோபுரத்தை ஒட்டினாற்போல், நவீன நிழற்குடை அமைக்கப்பட்டு வருவது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தள்ளி வைப்பரா?: அங்கு நிழற்குடை அமைக்கப்படும் பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில், பேருந்துகள், கோவிலின் வாசலை மறைத்து தான் நிற்க வேண்டி வரும். திருவிழா காலங்களில், இந்த நடவடிக்கை மேலும் நெரிசலைத் தான் உருவாக்கும். இதுகுறித்து திருவான்மியூரை சேர்ந்த கணேஷ் கூறுகையில்,கோபுரத்தின் வடபக்கம், பேருந்து நிழற்குடை அமைத்தால், கோபுர வாசலில் தான், பேருந்து நிற்க வேண்டி வரும். இதனால், பங்குனி திருவிழா உள்ளிட்ட கோவில் கொண்டாட்டங்கள் பாதிக்கப்படும். நிழற்குடையை, தள்ளி வைக்க வேண்டும், என்றார் இதுகுறித்து, அடையார் மண்டல அதிகாரிகளிடம் கேட்ட போது,புதிய நிழற்குடையால் பாதிப்பு என, இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. அப்படி புகார் வரும் பட்சத்தில், இடத்தை ஆய்வு செய்து மாற்றுவது குறித்து, முடிவெடுப்போம் என்றனர்.