பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை ஒட்டி, பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, இலவச லட்டு வழங்கப்படும் என, திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கண்ணையா கூறினார். தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சென்னையில் நேற்று கண்ணையா கூறியதாவது: திருப்பதியில் நாளை முதல்,13ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் வரும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னை, எழும்பூர் காச்சிக்குடா இடையே இயக்கப்படும் காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். பிரம்மோற்சவத்திற்கு திருப்பதி மலையடிவாரத்தில் இருந்து, தினசரி, 25 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரம் பேர் பாத யாத்திரையாக திருமலைக்கு வரலாம் என, எதிர்பார்கப்படுகிறது. அவர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, 4,500 போலீசார் பணியமர்த்தப்படுவர். மேம்பட்ட சுகாதார வசதி, மருத்துவ குழுக்கள், தங்கும் இடவசதி, இலவச உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க, அதிநவீன வசதிகளோடு ஒருங்கிணைக்கப்பட்ட கன்ட்ரோல் அறை யும் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, கண்ணையா கூறினார்.