சதுரகிரி கோயில் உண்டியல் பணம்: ரூ.4.50 லட்சம் ஸ்வாகா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2013 10:10
மதுரை: மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் பணம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மாயமானது. இக்கோயிலின் ஆடி அமாவாசை விழா ஆக., 7ல் நடந்தது. பத்து லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிர்வாக அலுவலர் குருஜோதி, துணை கமிஷனர் பச்சையப்பன் முன்னிலையில் ஆக., 21ல் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்தனர். உண்டியல் வருவாய் குறித்து இறுதி பட்டியல் தயாரிக்கும் போது ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மாயமானது தெரிந்தது. உண்டியல் எண்ணுவதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோயில் ஊழியர்கள் புகார்படி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மண்டல இணை கமிஷனர் முத்துதேவராஜன் விசாரணை நடத்தினார். உண்டியல் எண்ணும் வீடியோவை ஆய்வு செய்தார். அப்போது உண்டியல் எண்ணிய பின் ரூபாய் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒருவர் ரூ.1000, ரூ.500 கட்டுக்கள் மீது கர்சீப் போட்டு திருடுவது தெளிவாக இருந்தது. இதைப்பார்த்த மண்டல இணை கமிஷனர் அதிர்ச்சியடைந்தார். விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க கமிஷனருக்கு அனுப்பியுள்ளார். முத்துதேவராஜன், உண்டியல் பணம் திருடப்பட்டதாக சந்தேகம் உள்ளது. வீடியோ ஆதாரங்களில் ஒருசிலர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உண்டியல் பணம் திருடப்பட்டதா என்பது விசாரணைக்கு பின் தான் தெரியும், என்றார்.