பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
நாகர்கோவில்: சபரிமலையில், வெளிமாநில பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் தொடர்பாக ஆலோசிக்க, தமிழகம் உட்பட, நான்கு மாநில அறநிலையத் துறை அமைச்சர்கள், ஆலோசனை கூட்டம் வரும், 17ம் தேதி, திருவனந்தபுரத்தில் நடக்கிறது. கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில், 2 கோடி ரூபாய் செலவில், இரண்டு அன்னதான மண்டபங்கள், நன்கொடையாளர்கள் மூலம் கட்டப்படுகின்றன. மரக்கூட்டம் என்ற இடத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்ட, சுவாமி அய்யப்பன் சாலை, தார் போடப்பட்டு விளக்குகள் பொருத்தப்படும். சபரிமலை செல்லும் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க, 153 கோடி ரூபாயை, கேரள அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு நிலக்கல்லில், 8,000 வாகனங்கள், பார்க்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சன்னிதானம் அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. சபரிமலை மாஸ்டர் பிளானை செயல்படுத்த வசதியாக, அரசு, 25 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. சன்னிதானத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டும் பணி நடக்கிறது. இதன் இரண்டு தளங்கள், வரும், மண்டல, மகர விளக்கு சீசனுக்கு முன் திறக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, போலீஸ் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட ஆன்லைன் முன்பதிவு, இந்த ஆண்டு மேலும் விரிவு படுத்தப்படும். சபரிமலையில், வெளிமாநில பக்தர்களுக்கு, செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் தொடர்பாக ஆலோசிக்க, வரும், 17ம் தேதி, தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநில, அறநிலையத் துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும், ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. நிலக்கல்லில் இம்மாநிலங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது. இதில், கர்நாடகா இடத்தை பெற்று கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. அம்மாநில அரசு சார்பில், அங்கு 1,000 கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
செய்யப்பட உள்ள வசதிகள்:
* 2 கோடி ரூபாய் செலவில், இரண்டு அன்னதான மண்டபங்கள்.
* சுவாமி அய்யப்பன் சாலை, தார் சாலையாகிறது; மின் விளக்குகளும் உண்டு.
* சபரிமலை செல்லும் சாலைகள் அனைத்தும் சீரமைப்பு.
* நிலக்கல்லில், 8,000 வாகனங்கள் நிறுத்துமிட வசதி.
* சன்னிதானம் அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.