பதிவு செய்த நாள்
07
அக்
2013
10:10
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தர் இன மக்களின் குல தெய்வ பண்டிகையின் போது நடக்கும் கில்லியாட்டம் மற்றும் வழிபாடுகள், அவர்கள் அணியும் ஆட்குபஸ் உடை, நாட்டின் வேறு எங்கும் இல்லாத வகையில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கோக்கால், திருச்சிகடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, புதுகோத்தகிரி உட்பட பல பல கிராமங்களில் கோத்தர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குல தெய்வமான அய்னோர் அம்னோர் பண்டிகையின், ஒரு பகுதியாக, கிராம பெண்கள், அவர்களின் குல தெய்வ நிலத்தில் இருந்து மட்டும், களி மண்ணை எடுத்து வந்து, பானைகளை செய்வர். ஆண்கள் மட்டும் அங்குள்ள ஆற்றில் குளித்து, குல தெய்வ கோவிலில் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்பின்பு, புதிய மண் பானையில் சாமை தானியத்தில் பொங்கல் செய்து, குல தெய்வத்திற்கு படையல் வைப்பது வழிப்பாட்டின் சிறப்பு அம்சமாகும். பல நாட்கள் நடக்கும் திருவிழாவில், சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் நடனமாடுவர். இதன், இசை மற்றும் நடனம் வியக்க வைப்பதாக இருக்கும். இதில், சிறப்பம்சமாக, ஆண்கள் சிலர் மட்டும் ஆட்குபஸ் என்ற உடையை அணிந்து நடனமாடுவர். இதனை பார்க்க வரும் உள்ளூர் மக்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியப்படையாமல் திரும்ப முடியாது.
குதூகலப்படுத்தும் கில்லியாட்டம்: அய்யனோர்-அம்மனோர் பண்டிகையின் தொடர்ச்சியாக, பில் அஸ் பப்ம் என, கோத்தரின மக்களால் அழைக்கப்படும் கில்லி பண்டிகையை மிகவும் குதூகலமாக நடப்பது வழக்கம். இந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோத்தரின மக்களும், இதனை பார்ப்பதற்காக உள்ளூர் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோக்கால் கிராமத்துக்கு வருவர். இரண்டு நாள் நடக்கும் இந்த பண்டிகையில், அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவது வழக்கம். ஆண்டுதோறும் இந்த பண்டிகை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில், குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும். இதற்கான தேதி, ஆண்டுதோறும் மாறுபடுகிறது.
செய்தி: என்.பிரதீபன் , படங்கள் ஒய்.ஜே.ரகு