பதிவு செய்த நாள்
07
அக்
2013
10:10
திருப்பூர்: நவராத்திரி விழாவில் நடக்கும், சண்டி ஹோமத்தில் பங்கேற்பவர்கள் லோகமாதா அருளுக்கு பாத்திரமாவார்கள், என மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் பேசினார். திருப்பூர் குமார் நகர் கிழக்கு சக்தி விநாயகர், ராஜராஜேஸ்வரி, முத்துக்கருமாரியம்மன் கோவிலில், 16ம் ஆண்டு நவராத்திரி ஸ்ரீமகா சண்டியாக விழா நேற்று துவங்கியது; வரும் 28 வரை நடக்கிறது. மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள், நவராத்திரி மகா சண்டி ஹோமத்தை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நேற்று காலை 7.30 மணிக்கு, துர்கா, லட்சுமி, சரஸ்வதி கடஸ்தாபனம், ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணம், சண்டிஹோமம், நவதுர்கா ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலையில் குத்துவிளக்கு பூஜை, ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. "அன்னையின் அருள் என்ற தலைப்பில், சுவாமிநாத சிவாச்சாரியார் பேசியதாவது: துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரு சக்தியாக இருந்து உலகை இயக்குகின்றன. மக்கள் பல உருக்களில் அவர்களை வழிபடுகின்றனர். தீய சக்திகளை அழிக்கும் சக்தியை, துர்கா, காளி என்ற பெயர்களிலும், வரம் தரும் கருணை வடிவாகிய சக்தியை, ராஜராஜேஸ்வரி, பவானி, பார்வதி என்றெல்லாம் அழைக்கின்றனர். தீய சக்தியை அழித்து மக்களுக்கு நன்மை அருள்வதற்காக அன்னை, ஒன்பது நாட்கள் தவம் இயற்றுகிறாள். அத்தகைய ஒன்பது நாட்களே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியாகவும், இறுதி மூன்று நாட்களில் சரஸ்வதியாகவும் கொழு வைத்து, பக்தர்கள் வழிபடுகின்றனர். நவராத்திரி விழாவையொட்டி, தீய சக்திகளை அழித்து, உலகத்தை காத்த அன்னையை சண்டிஹோமம் நடத்தி பிரார்த்திக்கிறோம். சண்டிஹோமம் செய்வது மிகவும் உயர்வான விஷயம்; ஹோமத்தில் பங்கேற்பவர்கள் லோகமாதா அருளுக்கு பாத்திரமாவார்கள். நம்மிடம் உள்ள தீய எண்ணம் அழியும்; பகைவர்கள் மறைவார்கள். குழந்தைகளுக்கு கல்வியறிவு பெருகும். வியாபாரிகளுக்கு தொழில் பிரச்னை தீரும். கடல் அன்னையின் அருள் கிடைக்கும். திருமண தடை நீங்கும், குழந்தை வேண்டுபவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, இனிய இல்லறம் அமையும். இவ்வாறு, அவர் பேசினார்.