பதிவு செய்த நாள்
09
அக்
2013
11:10
மனித வடிவில், தெய்வீக அம்சங்களுடன் விளங்கியவர்கள் சித்தர்கள். அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். ஆன்மீகம், யோகம், மருத்துவம், சமூக சீர்திருத்தத்தை நோக்கமாக கொண்டு செயல்பட்டவர்கள் சித்தர்கள். பெயர் தெரியாத எத்தனையோ சித்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து கொண்டுள்ளனர். இத்தகைய சித்தர்களில் ஒருவர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் கட்டிக்குளம் கிராமத்தில் 1858 ம்ஆண்டு அவதரித்தவர் மாயாண்டி சுவாமி. இவர் தந்தை குப்பமுத்து அதே ஊரில், அய்யனார் கோயில் பூசாரியாக இருந்தார். சிறுவயதில் தந்தையுடன் கோயிலுக்கு செல்லும் மாயாண்டி அங்கு தியானத்தில் ஆழ்ந்துவிடுவது வழக்கம். தியானத்தில் இருக்கும் போது உடலில் பாம்பு ஊர்ந்து விளையாடுவதைக் கூட அறியாமல் இறையுணர்வுடன் ஒன்றிய மாயாண்டி சுவாமியை அதிசய மனிதராக ஊர் மக்கள் கருதினர். பரம்பரை வைத்திய ஏடுகள், சித்தர்கள் நூல்களை கற்று தேர்ச்சி பெற்றார் மாயாண்டி சுவாமி. குலத்தொழில் மண்பாண்டத்தொழிலை செய்து அதில் கிடைத்த பணம் மூலம் மக்களுக்கு உணவளித்து மகிழ்ந்து வந்தார்.
வாலிபப் பருவத்தில் மீனாட்சி அம்மையாரை மணந்தார். ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். இதன்பின் சுவாமியின் மனம் தவ வாழ்க்கையை நாடியது. குடும்பத்தைப் பிரிந்து பல ஊர்களுக்கு சென்று திருப்பரங்குன்றம் அருகே திருக்கூடல்மலைக்கு வந்தார். அங்கு தான் மாயாண்டி சுவாமிக்கு ஞானம் பிறந்தது. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடர், சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளிடம் சீடனாகப் பணிந்து அருள்மந்திர உபதேசம் பெற்றார் மாயாண்டி சுவாமி. அதன் பின் மதுரையை சேர்ந்த செல்வந்தர் இருளப்பக்கோனாருக்கு 26 வயதில் இருந்த கண்டத்தை நீக்க தவம் இருந்து தீர்க்க ஆயுள் அளித்தது, கருப்பனேந்தலில் இருந்தபடி காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளின் தரிசனத்தை இருளப்பக்கோனாருக்கு காட்டியருளியது, மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் ரயிலில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்டதும், தன் அருளால் ரயில் நகர விடாமல் அற்புதம் செய்தது, டிக்கட் பரிசோதகர் பணிந்து வேண்டியதும் ரயில் நகர அருள் புரிந்தது, தன் பக்தனைத் தீண்டிய கருநாகத்தின் விஷத்தை தான் ஏற்று பக்தனை உயிர் பிழைக்கச்செய்தது, தண்ணீரில் விளக்கேற்றியது, கள்ளர்களை அடக்கியது, மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கு அருள்பாலித்தது, பலரின் நோய்களை நீக்கியது... என மாயாண்டி சுவாமி செய்த அற்புதங்கள் எண்ணில் அடங்காதவை.
ஆழ்வார்திருநகரியில்...
சுவாமிக்கு பிடித்தமான ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி. மதுரையில் இருந்து சுவாமி அவ்வப்போது கால்நடையாக ஆழ்வார்திருநகரிக்கு வந்து செல்வார். ஆழ்வார்திருநகரியில் விநாயகர் கோயில், மடாலயத்தை நிறுவினார். அக்காலத்தில் காவடிப்பானைகளை தோளில் சுமந்து பல தெருக்களுக்கு சென்று அன்னத்தை தானமாக பெற்று மடாலயத்தில் இருந்தபடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்குவது சுவாமியின் வழக்கம். பல வீடுகளில் பெற்ற பழைய உணவு சுவாமி கைபட்டதும் பக்தர்களின் பசியை நீக்கும் அறுசுவை அமிர்தமாக மாறும் அதிசயமும் நடந்துள்ளது. ஏரல் அருகே மங்கலக்குறிச்சியில் ஆற்றைக் கடக்க பரிசலில் ஏறி அமர்ந்த மாயாண்டி சுவாமியிடம் பணம் இல்லை என்பதற்காக பரிசலில் இருந்து இறக்கி விட்டார் பரிசலை ஓட்டியவர். ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்ததும் பரிசல் கரைக்கு செல்ல முடியாமல் தத்தளித்தது. பரிசலில் இருந்தவர்கள் பீதியில் அலறினர். அப்போது எதிர்கரையில் நின்று மாயாண்டி சுவாமி, கைதட்டி அழைத்ததும் பரிசல் கரைக்கு வந்துள்ளது. ஆழ்வார்திருநகரியை சேர்ந்த மாயாண்டி ஆசாரியிடம், இன்று உன் வீட்டுக்கு சாப்பிட வருகிறேன் என மாயாண்டி சுவாமி கூறியுள்ளார். வறுமையில் வாடிய மாயாண்டி ஆசாரி, சுவாமிக்கு எப்படி உணவு அளிப்பது என தன் மனைவியிடம் கூறி வருந்தினார். பின்னர் மாயாண்டி ஆசாரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டில் சுவாமி அருளால் அறுசுவை உணவு தயாராக இருந்துள்ளது. இதுபோல பல அற்புதங்களை மாயாண்டி சுவாமி தன் அருள் வலிமையால் நிகழ்த்தியதை ஆழ்வார்திருநகரி மக்கள் தற்போதும் கூறுகின்றனர். ஆழ்வார்திருநகரியில் சுவாமி பிரதிஷ்டை செய்த விநாயகர் கோயில் தற்போது செல்வ சுந்தர விநாயகர் கோயில் என குறிப்பிடப்படுகிறது. மடாலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு மாயாண்டி சுவாமியின் ஐம்பொன் சிலைக்கு தினமும் பூஜை நடக்கிறது. மடாலய வளாகத்தில் உள்ள கிணற்றுத்தண்ணீருக்கு நோய்களை தீர்க்கும் சக்தி உள்ளதாக அப்பகுதியினர் நம்புகின்றனர்.
83 வது குருபூஜை: 1930ம் ஆண்டு புரட்டாசி 11ம்தேதி சட்டையை கழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என பக்தர்களுக்கு அறிவித்து விட்டு முக்தியடைந்தார் மாயாண்டி சுவாமி. திருக்கூடல் மலையில் சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்திற்கு வடபுறம் சுவாமிக்கு சமாதி எழுப்பப்பட்டது. ஆண்டுதோறும் மாயாண்டி சுவாமிக்கு மதுரை திருக்கூடல்மலை, ஆழ்வார்திருநகரி, ரங்கூன், பர்மாவில் குருபூஜை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 83 வது குருபூஜை நாளை ஆழ்வார்திருநகரியில் நடக்கிறது.