மாமல்லபுரத்திலிருந்து வடக்கே 3 கி.மீ. தூரத்தில் புலிக்குகை அமைந்துள்ளது. இங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் அதிரணசண்ட மண்டபம் என்ற குடைவரைக் கோயிலைக் காணலாம். இக்கோயிலுக்குத் தென்புறத்தில் துர்க்காதேவி வலது காலை தாமரை மீது ஊன்றி, இடது காலைச் சிம்மத்தின் மீது அமர்த்தி மகிஷாசுரனுடன் போரிடும் காட்சியும், மகிஷாசுரன் அஞ்சி ஓடும் காட்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.