பதிவு செய்த நாள்
10
அக்
2013
10:10
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5வது நாளில் தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 7ம் தேதி காலை திருப்பல்லக்கு திருமஞ்சனம், இரவு சேஷ வாகன உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை, 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும் நடந்தது. இரவு 11 மணிக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று காலை 8 மணிக்கு திருப்பல்லக்கு, மதியம் 1 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு யானை வாகன உற்சவம் நடந்தது. இன்று(10ம் தேதி) காலை சூர்ணேத்சவம் சர்வபூபால விமானம், 11 மணிக்கு ஸ்ரீமதாதிவண் சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் வீதியுலா, இரவு 10 மணிக்கு திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கு உற்சவம் நடக்கிறது. நாளை காலை பெருமாள் வெண்ணை தாழிசேவையும், 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு வேடுபரி குதிரை வாகன உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 12ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் ரதோற்சவம் நடக்கிறது. 11 மணிக்கு பத்தி உலாத்துதல் திருமஞ்சனம், 13ம் தேதி காலை மட்டியடி உற்சவம், இரவு பெருமாள் தேசிகர் திருவீதி புறப்பாடு சப்தாவர்ணம், 14ம் தேதி காலை திருமஞ்சனம், மாலை த்வாதச ஆராதனம், இரவு விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. வரும் 15ம் தேதி காலை ஸ்ரீதேசிகர் சுவாமிக்கு திருமஞ்சனம், மாலை ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன் திருவீதி புறப்பாடும் நடக்கிறது.