பதிவு செய்த நாள்
11
அக்
2013
10:10
அவிநாசி: மழை பெய்ய வேண்டியும், உலக அமைதிக்காகவும், தெக்கலூரில், விநாயகர் சிலையை தண்ணீரில் மூழ்க வைத்து, பூஜை செய்யும் நூதன வழிபாடு நடந்தது. அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சி பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று விட்டது. தண்ணீர் இல்லாததால், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மழை பெய்ய வேண்டி, வெள்ளாண்டிபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில்
மற்றும் அரச மரத்தடி பிள்ளையார் கோவிலிலும் நூதன வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அரச மரத்தடி பிள்ளையார் கோவிலில், சிலையை மறைத்து சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சித்தி விநாயகர் கோவிலில் இருந்து தினமும் இரவு 8.00 மணிக்கு சிறுமியரும், பெண்களும், தண்ணீர் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று, தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து, சிலையை மூழ்க வைத்து, பூஜை நடத்தினர். அதன்பின், மீண்டும் சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, மழை வழிபாடு நடந்தது.
வருண ஜபம்: பொங்கலூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், குடிநீருக்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழை பெய்ய வேண்டி, பொங்கலூர் வாவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில், வருண ஜபம் நடத்தினர். இதற்காக, 108 புனித நீர் கலசங்களில் நீர் நிரப்பியும், 108 சங்கு வைத்தும் பூஜை செய்தனர். மேலும், கன்னி பூஜை, அசுவமேத யாகம், வருண ஜப யாகம் செய்தனர். இறுதியில், அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள் ரங்கசாமி, வெங்கடாசலம், வாவிபாளையம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.