பதிவு செய்த நாள்
11
அக்
2013
10:10
சபரிமலை: சபரிமலை மேல்சாந்தி பதவிக்கு, 16 பேர் பட்டியலையும், மாளிகைப் புறத்துக்கு, 12 பேர் பட்டியலையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தயாரித்துள்ளது. இதிலிருந்து, தலா ஒருவர் வீதம் வரும், 17ம் தேதி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும், புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக, ஒரு பட்டியலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தயாரிக்கிறது. இந்த ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு திருவனந்தபுரத்தில் ஒரு வார காலம் நடைபெற்றது. தேவசம்போர்டு தலைவர் அட்வகேட் கோவிந்தன்நாயர், உறுப்பினர்கள் சுபாஷ்வாசு, குமாரன், ஆணையர் வேணுகோபால், சபரிமலை தந்திரிகள் கண்டரரு மகேஸ்வரரு, கண்டரரு ராஜீவரரு, தந்திரி அக்கீரமண் காளிதாசபட்டதிரி ஆகிய, ஏழு பேர் கொண்ட கமிட்டி, இந்த நேர்முகத் தேர்வை நடத்தியது. சபரிமலை மேல்சாந்திக்காக, 73 பேரும், மாளிகைப்புறம் மேல்சாந்திக்காக, 38 பேரும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், 60 சதவீதத்துக்கு அதிக மதிப்பெண் பெற்றவர்களில், சபரிமலைக்கு, 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாளிகைப்புறத்துக்கு, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியிலில் இருந்து, தலா ஒருவர், சபரிமலையில் வரும் 17ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். அவர் ஓர் ஆண்டு காலம், சபரிமலையில் தங்கியிருந்து, பூஜைகள் செய்ய வேண்டும். இதற்காக சபரிமலை நடை வரும், 16ம் தேதி மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது.