நவராத்திரி எட்டாம் நாள் அம்பாளை துர்க்கையாக அலங்கரிக்க வேண்டும். சிங்க வாகனத்தின் மீது அமரச் செய்து, சிவப்பு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சிதருகிறாள். இறைவன் நமக்கு தந்த வாழ்க்கை வளம் மிக்கதோ, ஏழ்மையானதோ, எப்படி இருந்தாலும் அதை ஏற்று வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவர் வாழ்வைப் பார்த்து நமக்கும் அப்படி அமையவில்லையே என பொறாமைப்படக் கூடாது. மகிஷன் என்ற அசுரனுக்கு பெரிய ராஜ்யம் இருந்தது. ஆனாலும், தேவலோகத்தின் மீது ஆசை கொண்டு, அதைப் பறித்துக் கொண்டான். முனிவர்களையும் யாகம் செய்ய விடாமல் தடுத்தான். அவனால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றெரிச்சல் அக்னியாக மாறியது. அதிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவளுக்கு எல்லா தெய்வங்களும் தங்களின் ஆயுதங்களை கொடுத்தனர். அவள் மகிஷனை அழித்து "மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள். மீனாட்சியம்மனை இந்த கோலத்தில் தரிசித்தால் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
நைவேத்யம்: புளியோதரை தூவ வேண்டிய மலர்: செவ்வரளி
பாட வேண்டிய பாடல்: நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.